தங்கவயல் நகராட்சி தலைவர் தேர்தல் கவுன்சிலர்கள் மத்தியில் விறுவிறுப்பு
தங்கவயல் நகராட்சி தலைவர் தேர்தல் கவுன்சிலர்கள் மத்தியில் விறுவிறுப்பு
ADDED : ஜன 08, 2024 11:48 PM
தங்கவயல்: தங்கவயல் நகராட்சிக்கு இரண்டாம் கட்ட தலைவர் தேர்தல் எட்டு மாதங்களுக்கு பிறகு நடக்க இருப்பதால், கவுன்சிலர்கள் மத்தியில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.
தங்கவயல் நகராட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதில் பலரது கவனம் திரும்பியுள்ளது. 35 பேர் உள்ள நகராட்சியில் காங்கிரஸ் 14, சுயேச்சைகள் 14. இந்த 14ல், எட்டு பேர் காங்கிரசின் ஆதரவில் உள்ளனர்.
பா.ஜ.வில் மூன்று இந்திய குடியரசு கட்சியில் இருவர். அதில் ஒருவர் காங்கிரசின் நிழலில் இளைப்பாறுகிறார். ம.ஜ.த., சி.பி.எம்., தலா ஒருவர் உள்ளனர்.
முதற்கட்டமாக இரண்டரை ஆண்டுகள் நகராட்சி தலைவராக இருந்த முனிசாமியின் பதவி காலம் 2023 மே மாதத்துடன் முடிந்து போனது.
இரண்டாம் கட்ட தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தாமல் போனதால் எட்டு மாதங்களாக தலைவர் இல்லாத நகராட்சியாக, ரூபகலா எம்.எல்.ஏ., வழிகாட்டுதலோடு நகராட்சி ஆணையர் பொறுப்பில் இயங்கி வருகிறது.
இதனால், நகராட்சி உறுப்பினர்கள் செயல்பாடு முடங்கி உள்ளது. ஜனநாயக மரபு படி நகராட்சி உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டமும், வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய வேலைகளும் எடுத்து சொல்லி தீர்மானிக்க முடியவில்லை.
மாநில அரசு விரைவில் தேர்தல் நடத்த போவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால், தலைவர் பதவிக்கு தங்கவயல் நகராட்சியில் சூடு பிடித்துள்ளது.
முதற்கட்ட தலைவர் பதவிக்கு பொது பிரிவு இட ஒதுக்கீடு இருந்தது. அதில் காங்கிரசின் முனிசாமி, தலைவரானார். எம்.எல்.ஏ., ரூபகலாவுக்கும் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். அவர் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் பெரிய அளவில் எழவில்லை.
இரண்டாம் கட்ட தலைவர் பதவிக்கு எஸ்.சி., பெண் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.
ஆனால், தேர்தல் தான் நடத்தவில்லை. அப்படி எஸ்.சி., பெண் ஒதுக்கீடுபடி தேர்தல் நடத்தினால், 13 பெண் உறுப்பினர்கள் போட்டியிட தகுதி உடையவர்கள்.
காங்கிரசில் ஆறு எஸ்.சி., பெண் உறுப்பினர்கள் உள்ளனர். இதில் முதல் கட்ட தலைவராக இருந்த முனிசாமியின் மனைவி சாந்தியும் ஒருவர்.
இவர் காங்கிரஸ் பெண் உறுப்பினர்களில் மூத்த வயதுடையவர். இவருக்கு வாய்ப்பு வேண்டும் என்று கணவரான முனிசாமி கோரி வருகிறார்.
புதிதாக இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சுபாஷினியும் தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதியானவர். அவரையும் பரிசீலிக்க வாய்ப்பு உள்ளது.