தங்கவயல் நேரு கல்யாண மண்டபம்; சுரங்க நிறுவனம் பொறுப்பு ஏற்பு
தங்கவயல் நேரு கல்யாண மண்டபம்; சுரங்க நிறுவனம் பொறுப்பு ஏற்பு
ADDED : நவ 05, 2024 05:51 AM

தங்கவயல்; உரிகம் ஐந்துவிளக்கு பகுதியில், நேரு கல்யாண மண்டபம் உள்ளது. இது தங்கச் சுரங்க நிறுவனத்திற்குச் சொந்தமானது. தங்கச்சுரங்கம் மூடப்பட்ட பின், சில தங்கச்சுரங்க அதிகாரிகள், நேரு திருமண மண்டபத்தை தனியார் அறக்கட்டளை பெயரில் தங்கள் வசம் ஆக்கி கொண்டனர்.
திருமணம் உட்பட பல்வேறு வைபவங்களுக்கு கல்யாண மண்டபத்தை வாடகைக்கு அளித்து வருமானம் பெற்றனர். இதன் மூலம், 23 ஆண்டுகளாக, சட்டவிரோதமாக கட்டணம் பெறுவதாக பலரும் குற்றஞ்சாட்டி வந்தனர்.தனியார் அறக்கட்டளையினரை வெளியேற்றுமாறு தங்கச் சுரங்க நிறுவனம் வலியுறுத்தியது. இதன் காரணமாக அறக்கட்டளை நிர்வாகிகள், தங்களிடமே கல்யாண மண்டப நிர்வாகம் இருக்க வேண்டும் என வழக்கு தொடுத்தனர்.
இவ்வழக்கு விசாரணையில், அக்டோபர் 1ம் தேதி, அறக்கட்டளையின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவுக்கு பின்னரும், ஒரு மாதமாக தங்கச் சுரங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்தனர்.
இதை அறிந்த, தங்கச் சுரங்க முன்னாள் தொழிலாளர்களான விஜயராகவன் அணியினர், 'கல்யாண மண்டபத்தை, நாங்களே நடத்துகிறோம். எங்களிடம் ஒப்படையுங்கள்' என்று கோரினர்.
இந்நிலையில் நேற்று தங்கச் சுரங்க நிறுவன தலைமை அதிகாரி சசி ரஞ்சன், செக்யூரிட்டிகளுடன் சென்று, கல்யாண மண்டபத்திற்கு பூட்டுப்போட்டார்.
திருமணம் உட்பட வைபவங்களுக்கு கல்யாண மண்டபம் தேவைப்படுவோர், தங்கச் சுரங்க தலைமை நிலையமான சொர்ண பவனில் 'புக்கிங்' செய்ய வேண்டும் என, 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டது. மண்டபத்திற்கு காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் அறக்கட்டளை பொறுப்பில் இருந்த நேரு கல்யாண மண்டபத்தின் நிர்வாகத்தை நேற்று முதல் தங்கச்சுரங்க நிறுவனமே ஏற்றுக் கொண்டது.

