ADDED : செப் 19, 2024 05:48 AM
அல்வா தரப்போறாங்க!
ஹிந்துஅறநிலையத் துறை மேம்பாட்டுக்காக சி.எம்., ஸ்பெஷல் நிதி, பொன்னகருக்கு 4 கோடி ஒதுக்கிட்டாங்க. இந்த நிதியில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த ஏழுமலையான் சுவாமி கோவிலில் 70 சதவீத தொகையில் ராஜ கோபுரம் கட்ட முடிவாகி உள்ளது.
இதுக்காக பூமி பூஜை போட்டு ஆறு மாதங்கள் கடந்தும் போனது. ஆனாலும், இன்னும் அதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகவே இல்லை. கட்டுமான பணிக்கான டெண்டரும் கோரவே இல்லை. இன்னுமா இதற்கான ஆள் கிடைக்கலன்னு சிலர் கூடி பேசுறாங்க.
ஏற்கனவே பல திட்டங்களுக்கு, பல கோடி ரூபாய் மதிப்புக்கு டெண்டரை வெளியூரார் பெற்றது போல, இதையும் வெளியூர் காரரே பெறலாம். உள்ளூர்காரர்களுக்கு இதிலயும் அல்வா கொடுக்க போறாங்களாம்.
அரசு ஊழியருக்கு கல்தா?
போலி கையெழுத்து மூலம், 12 வருஷம் அரசு ஹாஸ்டலில் வார்டனாக வேலை பார்த்தவர் போலி ஆவணம் மூலம் பணியில் சேர்ந்திருப்பதை கண்டுபிடிச்சிட்டாங்க. சமையல் செய்வோருக்கு உதவியாளராக ஒப்பந்த தொழிலாளியாக இருந்தவர், அதிகாரிகளின் கையெழுத்தை இவரே போட்டு, போலி ஆவணங்கள் தயாரித்து வார்டனாக பதவி உயர்வு பெற்றதை விபரம் அறிந்தவங்க அரசுக்கு புகார் செய்தாங்க.
தோண்டி எடுத்து விசாரித்ததில், உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இவர்கள் முடிவின்படி சமூக நலத்துறை 12 வருஷமா பணியில் இருந்தவருக்கு கல்தா கொடுத்திருக்காங்க. இன்னும் எத்தனை போலிகள் பணியில் இருக்காங்களோ, அவர்களுக்கு இப்பவே குளிர் காய்ச்சல் தொடங்கிடுச்சி.
வாழ இடம் தருவாங்களா?
மாரிகுப்பம் ராஜர்ஸ் கேம்ப் பகுதியில், 25 வருஷத்துக்கு முன்னாடி அரசு 400 ஆஷ் ரியா வீடுகளை கட்டினாங்க. இதில் பல வீடுகள் சிதைந்து போயின.
இந்த வீடுகளில் வசிப்பவர்கள் எல்லோருமே பி.பி.எல்., கார்டு பேமிலிகள் தான். ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை எல்லாமே இந்த வீட்டு அட்ரசில் தான் இருக்குது.
முதியோர், விதவை, மாற்று திறனாளிகளுக்கான அரசு உதவித் தொகை, அரசு வாக்குறுதிகளின் ஐந்து அம்ச திட்ட சலுகைகள் எல்லாமே கிடைத்து வருகிறது. இங்குள்ள வீடுகளை அகற்ற ஆக் ஷன் எடுத்திருக்காங்க. இடித்து தள்ளி புதுசா அரசு வீடுகளை கட்டப் போறாங்களாம்.
ஆனால் இங்கு குடியிருப்பவர்களுக்கே மீண்டும் வீடுகள் கிடைக்குமா என்பதற்கு உத்தரவாதம் இல்லையே. வீடிழந்தால் இனி பிளாட்பாரத்தில் தான் குழந்தைகளோடு குடித்தனம் நடத்தணுமா? இதுக்கு யார் பதிலை தருவது.
சென்ட்ரல் மற்றும் ஸ்டேட் அரசுகள், வீடில்லாத பல லட்சம் குடும்பங்களுக்கு பல கோடி செலவிட்டு வீடுகள் கட்டித் தருவதாக அறிவிக்கிறாங்க. அதில், இவங்களுக்கும் வீடுகள் வழங்க உத்தரவாதம் தருவாங்களா?
போலிகள் நடமாட்டம்!
டாக்டர் சான்றிதழ் இருந்தால் தான் ஆர்.டி.ஓ., டிரைவிங் லைசென்ஸ் தரணும் என்பது சட்டம். இதுக்காக, ஹைஸ்கூல் கூட முடிக்காதவங்க, எம்.பி.பி.எஸ்., டாக்டராகி சர்ட்டிபிகேட்டை தராங்களாம். இதை சில புரோக்கர்களே தயாரிப்பதாக சொல்றாங்க.
இது, வருஷ கணக்கில் நடந்து வரும் பகல் மோசடியாம். ஆனால், இதை ஒருத்தரும் கண்டுகொண்டதாக தெரியல. சீல் ஸ்டாம்ப் வைத்துக்கொண்டு, க்ரீன் இங்க்ல சிக்னேச்சர் போட்டு டாக்டர்களாக மாறி வருவதாக சொல்றாங்க.
அதிரடியாக, குற்றப் பிரிவு போலீசார் ஆவணங்களை முறையாக பரிசோதனை செய்தால், எத்தனை பேர் கம்பி எண்ண வேண்டி வருமோ. தெரிந்தும் தெரியாமலும் வேலையை முடிக்க பல பேருக்கு கமிஷன் போவதால், போலிகள் வளமா இருக்காங்க.

