ADDED : செப் 21, 2024 06:58 AM
மறைமுக ஆதரவோ?
'ஸ்டேட் கேபிடல் சிட்டி குப்பைகளை கோல்டு சிட்டியில் கொட்டக் கூடாது. இதுக்காக, செப்டம்பர் 19ல் கோலாரில் நடக்கும் கே.டி.பி., எனும் கர்நாடகா டெவலப்மென்ட் புரோகிராம் என்ற கூட்டத்தில் போராட்டம் நடத்துவேன்; எதிர்த்து குரல் எழுப்புவேன்' என்றெல்லாம் பெருசா பில்டப் கொடுத்து கூவிய செங்கோட்டைக்காரரு, இது பற்றி அந்த கூட்டத்தில் பேசவே இல்லையாம். எதுக்கு இந்த கப்சா பேச்சு.
கோல்டு சிட்டியில் இருப்பவங்க, எதை சொன்னாலும் அப்படியே நம்பிடுவாங்கன்னு நெனச்சி சொல்லிட்டு போனாரு. அவருக்கு வேண்டுமானால் மறதி ஜாஸ்தியாக இருக்கலாம் ஆனால், ஜனங்க தெளிவாகவே இருக்காங்க. இவரும் கூட, குப்பை திட்டத்துக்கு மறைமுகமாக ஆதரவு தர்றாரோ என்னவோ, தெரியலை.
சாலை விரிவாக்கம் எங்கே?
ரா.பேட்டை சுராஜ்மல் சதுக்கம் முதல் ஆ.பேட்டை சதுக்கம் வரையிலான பி.எம்., சாலையை விரிவுப்படுத்தினாங்க. பழைய சாலையை தான் காண முடிகிறது. விரிவு செய்யப்பட்ட சாலையின் இருபுறமும், நான்கு ஆண்டுகளாக மண் தரையாவே இருக்குது. மழைகாலத்தில் சேறும் சகதியுமாக மாறுகிறது.
இந்த தரை பகுதியில் மரக்கன்றுகளை வேறு நட்டு வெச்சிருக்காங்க. எதுக்காக சாலை விரிவு செய்தாங்கன்னே தெரியல. சாலை அகலப்படுத்த, ஒப்பந்தப்படி பட்டுவாடா செய்யப்பட்டதா. எவ்வளவு தொகை பெறப்பட்டது. இதுல எத்தனை பேருக்கு பங்கு. முனிசி., நுழைவு வாயிலிலேயே இப்படியொரு மோசடியா?
தங்குமிடம் மூடல்!
தங்கமான நகரில் வீடற்றவர்கள் பஸ் நிலையம், ரயில் நிலையம், பூங்காக்கள், கடைத்தெருக்கள், என கண்ட கண்ட இடங்களில் தங்காமல் 'மறுவாழ்வு மையம்' ஒன்றை ஆ.பேட்டை சூ.பாளையத்தில் ஏற்படுத்தினாங்க.
இதுல தேடி கண்டுப்பிடிச்சி கொண்டு போய் சேர்த்தாங்க. சாப்பிட உணவு, படுக்க கட்டில், போர்வை, பேன், குளிக்க, இயற்கை உபாதைகள் கழிக்க கழிப்பறை, என எல்லா வசதியும் செய்து கொடுத்தாங்க. இதை பராமரிக்க தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைச்சாங்க. தேவையான நிதியையும் தந்தாங்க.
அப்படி இப்படின்னு, ஒரு வருஷம் தாக்கு பிடித்து இம்மையத்தை தொண்டு நிறுவனத்தார் நடத்தினாங்க. கடந்த ஆறு மாதமாக, முனிசி.,யில் இருந்து நிதி வழங்காமல் போனதால், அந்த தொண்டு நிறுவனத்தார், பராமரிப்பு வேலையை கைவிட்டுட்டாங்க.
மறுபடியும் நகரின் பல இடங்களில் தங்குறவங்க எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுக்காக முனிசி., பட்ஜெட்டில் நிதி ஒதுக்கினாங்களா, இல்லையான்னு தெரியல. தெரிஞ்சவங்க சொல்வாங்களா?
யாருக்கு லாபம்?
தேசப்பிதா மார்க்கெட் முனிசி.,க்கு தான் சொந்தமானது என்பது 100 சதவீதம் உண்மை. புதிய தலைவி கவனத்துக்கு வராமலேயே இங்கு திடீர் கடைகள் எப்படி முளைக்குது. கடை கட்டுவதற்கு யார் அனுமதி கொடுத்தது என பல தரப்பினரும் பேசுறாங்க.
கட்டடங்களை கட்டும் போது கண்மூடிக் கொண்டு இருந்து விடலாமா. பிரச்னை வரும் போது, தரை மட்டும் தான் முனிசி.,க்கு சொந்தம். கட்டடம் எங்களுடைய துன்னு பேசுறாங்க.
ஏற்கனவே, சிறுநீர் கழிப்பறையை இடித்து தள்ளி, நான்கு கடைகள் கட்ட வெச்ச சம்பவங்களும் இந்த மார்க்கெட்டில் தானே இருக்குது. ஒரு இன்ஸ்பெக்டர் இருந்தும் என்ன பிரயோஜனம். வருமானத்துக்கு குறையில்லை என்கிறாங்க.