ADDED : செப் 30, 2024 12:20 AM
சட்டை கிழிஞ்சிடுச்சு!
'மாவட்ட கை கட்சியில் உட்கட்சி குழப்பம் தீரும் என்பதில் நம்பிக்கையே இல்லை' என, அணிசாரா கட்சிக்காரர்கள் வேடிக்கை பார்க்கிறாங்க.
முன்னாள் சபாநாயகரை ஓரமா ஒதுக்கி வைப்பது, சிலருக்கு கொண்டாட்டமா இருக்குது. இதனால், இதன் எதிராளிகளுக்கு கொப்பளித்த கோபம், மாவட்டத்தோட சட்டை கிழிய வெச்சிடுச்சு. அமைதியா இருக்க சொன்னதை காதில் வாங்காமல் வார்த்தைகளில் சிலம்பம் ஆடினாங்க.
முதல்வரின் செக்ரட்டரி, அசெம்பிளிக்காரர்கள், மேல்சபைக்காரர் மெச்சிக்க வேணாமா. கோலாரு இவங்களுக்கு காலத்துக்கும் கோளாறு தான் என்பதால், எம்.பி., பதவி கூட, கை நழுவ குரூப்பிசம் தான் வேர் புழுவானது.
மாவட்ட தலைவரு யாருடைய விசுவாசி என்பதை பலருக்கும் புரிய வைத்திருக்கு. இவரின் பதவி அதிகாரம் இன்னும் எத்தனை நாட்களுக்கு என்பதை பார்ப்போம்னு சவால் விட்டாங்க.
முணுமுணுப்பு!
கோலார் கை காரங்க, தேசப்பிதா பர்த் டே அன்று, தொப்பி அணிந்து, பாதயாத்திரை நடத்த போறாங்களாம். ஒவ்வொரு தொகுதியிலும் தலா 200 பேர் வரணும்னு உத்தரவு போட்டிருக்காங்க. ஆனால் கட்சி 'பிளாக் தலைவர்'களுக்கு எங்கே மரியாதை இருக்குன்னு அங்கலாய்க்கிறாங்க. செலவுகளை கவனிப்பது யாரு என்று முணுமுணுப்பதையும் பார்க்க முடியுது.
வாசமில்லா மலர்!
'ஆன்லைன்' உறுப்பினர் சேர்ப்பில், கோல்டு சிட்டியில், பூ கட்சியினர் ஆர்வமே காட்டலயாம். கடந்த முறை பதிவு செய்தவர்களில் 25 சதவீதம் பேர் கூட இம்முறை பதிவு செய்ததில் இடம் பிடிக்கலயாம்.
கட்சி செயல் வீரர்கள் மந்தமாக இருப்பதற்கு நிர்வாகிகள் தான் காரணம் என்கிறாங்க. இரண்டு முக்கிய, 'மாஜி'க்களின் ஆதரவாளர்கள் ஒண்ணு கூடியிருந்தாலே ஏராளமானோரை புதுசா சேர்த்திருக்கலாமே.
உறுப்பினர் சேர்ப்பில், பல பழையவங்க கூட, ரினிவல் ஆகலன்னு தகவல்கள் தெரிவிக்குது. அசெம்பிளி எலக் ஷனில் சீட் எதிர்பார்த்து ஏமாந்தவர், தனித்து அறக்கட்டளை துவங்கி, பூவை உதிரியாக மாற்றி வருகிறார். இதை சரிப்படுத்த வேண்டியவங்க கண்டுக்கவே இல்லையாம். வாசமில்லா மலராக மாறி வருது!
போராட வழக்கு!
கோல்டு சிட்டியின் கனரக தொழிற்சாலை பகுதியில், 200 மீட்டர் தாண்டி தான் போராட்டம் நடத்த வேணுமாம். அப்படின்னா, நுழைவாயில் அருகே, உண்ணாவிரதம், தர்ணா நடத்த வாய்ப்பே இருக்காது.
மாநிலத்தை ஆட்சி நடத்தும் தலைமை செயலகத்துக்குள்ளேயே மக்கள் தலைவர்களான அசெம்பிளிகாரர்கள் போராட்டம் நடத்துறாங்க; வக்கீல்கள் பல முறை கோர்ட் வளாகத்திலேயே போராட்டம் நடத்துறாங்க. அதுக்கு வாய்ப்பு இருக்கும்போது, இதுக்கு ஏன் மறுக்கப்படுது. இதனால் அந்த தொழிலாளர்கள், வழக்கு போட்டிருக்காங்களாம்.

