இப்படி செய்தது ஏன்?
வீடு சொந்தம் ஆக்கணுமுன்னு கோர்ட் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தலையேன்னு ஆதங்கம் பலருக்கும் இருந்தது. மைன்சை மூடி 20 ஆண்டுகள் கடந்த பின்னர், கடைசியாக ஆஜர் பட்டியலில் இருந்த 3,200 பேருக்கு வீடுகள் வழங்குவதாக மைன்ஸ் அமைச்சகம் அறிவிச்சாங்க; அதற்கான சர்ட்டிபிகேட்டை வழங்கவும் நாள் குறிச்சாங்க. அதிகாரிங்களும் முன் வந்தாங்க. ஆனால், பி.எம்., படம் இல்லாமல் சர்ட்டிபிகேட் கொடுக்க கூடாதென, தாமரை முனி நிறுத்திட்டாரு.
அதிகாரிகளை சுயமாக வேலை செய்ய விடாமல் தடுக்குறாங்களேன்னு, அந்த அதிகாரி தனக்கு வேலையே வேணாம்னு தேசிய கேபிட்டலுக்கு பறந்துட்டாரு. தாமரை காரரின் செயல்பாடு, ஆபீசருக்கு மட்டும் பாதிப்பு இல்லை. சர்ட்டிபிகேட் கிடைக்க காத்திருந்த குடும்பங்களுக்கும் வருத்தமாகிடுச்சு.
விண்ணப்ப மூட்டை எங்கே?
இந்த நாட்டில இருக்கிற எல்லா குடும்பங்களுக்கும் கட்டாயம் வீடு இருக்கணும்னு தான் திட்டம் போட்டு சட்டமாக்கி, செலவழிக்கிறாங்க.
பி.எம். ஆவாஸ் யோஜ்னா, ரா.கா. ஆவாஸ் யோஜ்னா, வால்மிகி ஆவாஸ் யோஜ்னா, ஆஷ்ரியா என பல திட்டங்கள் இதுக்காக இருக்குது. இந்த திட்டங்கள், கோல்டு மைன்ஸ் குடியிருப்பு பகுதியில் உள்ளவங்களுக்கு வந்து சேரலையே.
வீடு இல்லாதவங்க எத்தனை பேர் என்ற கணக்கு கூட எடுக்கல. முனிசி.,யில் வீடில்லாதோர் 'லிஸ்ட்' இல்லையாம். ஆனால் வீடு இல்லாதவர்களிடம் வாங்கிய விண்ணப்பங்கள் அடங்கிய மூட்டையை எங்கு கொண்டு போட்டாங்களோ?
யாருக்கு யோகம்?
முனிசி., உறுப்பினர்களில் தமிழர் எண்ணிக்கையில் ஒண்ணு குறைஞ்சி போச்சு. இரண்டாம் கட்ட தலைவர் பதவிக்குரிய இட ஒதுக்கீட்டை முந்தைய காவி அரசு ஒதுக்கியது. இதை, தற்போதைய கைக்கார அரசு மாத்துவாங்களோ அல்லது பழசையே அமல் படுத்துவாங்களோன்னு தெரியல.
இட ஒதுக்கீடு அறிவிச்ச பின், அசெம்பிளி மேடம் சுட்டிக்காட்டுபவர் தான், பதவியில் அமர முடியும். வெறும் புலம்பல்களால் வெற்றி பெற முடியாது.
ஆசை நிறைவேறுமா?
யானை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே என்பது போல் நீண்ட நாளைக்கு பின், கோல்டு சிட்டியில் தாமரையின் முன்னாள் அசெம்பிளிக்காரர் மெதுவாக நடமாட ஆரம்பிச்சிருக்காரு. ஏன்னா இவருக்கு, இவரோட கட்சியின் மாவட்டத்தில் 'பவர்' வேணுமாம்.
கோல்டு தொகுதியில் கிராமம் மற்றும் நகரம் ரெண்டு பகுதிகளில் இவர் சொல்கிற ஆளுக்கு தான் தலைவர் பதவி தரணுமாம். இவரது ஆசையை எடிஜி., மகன் நிறைவேத்துவாரா. இதுக்கு செங்கோட்டை முனி ஒத்துக்குவாரா?

