ADDED : பிப் 10, 2024 06:13 AM
திருட்டை தடுக்க என்ன வழி?
அரசு மருத்துவமனையில் திருட்டு போகுதேன்னு தெரிந்தும் கூட அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்காங்களே. மகப்பேறு மருத்துவமனையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெண்தேக்கு மரங்கள், உட்பட பல பொருட்கள் திருடுப்போனது.
திருட்டை செய்றது வெளியில் இருந்து வர்றவங்களா இல்லை உள்ளிருக்கும் ஊழியர்களே ஆட்டைய போடுறாங்களா. எல்லாமே மர்மமாக தான் இருக்குது.
குழந்தை ஒன்று திருட்டுப்போனது. அதனையும் கண்டு பிடிக்கல. இதெல்லாம் நடந்தும் கூடம் செக்யூரிட்டிகளை நியமிக்கல. ஊர்க்காவல் படை காவலர்களை நியமிக்கணும்னு எழுதி கேட்டிருப்பதாக சொன்னாங்க.
தொற்று நோயியல் பிரிவுக்கு தனி மருத்துவமனை இருக்குது. இங்கு பாதுகாப்புக்கு உத்தரவாதமே இல்லை. காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. ஆடு மாடுகளுக்கு இருப்பிடமாக மாறியிருக்கு. இந்த மருத்துவமனையில் பல பொருட்கள் திருட்டுப் போனதாக சொல்றாங்க. இப்போதாவது பாதுகாப்பை கவனிப்பாங்களா.
'பென்ஷன்' கோல்மால்!
தபால் துறை மூலம் விதவை, முதியோர், மாற்று திறனாளிகளுக்கு அரசு பென்ஷன் அனுப்புறாங்க. ஆனால் அந்த பணத்தை வழங்காமல் இன்னைக்கு இல்லை, இன்னும் ரெண்டு, மூன்று நாட்கள் பொறுத்துவாங்கன்னு தெனாவட்டா பதிலை சொல்லி விரட்டுறாங்களாம்.
குறிப்பாக ஆ.பேட்டை யில் உள்ள நபர் பற்றி பலரு புகார் சொல்றாங்க. ஒரு பென்ஷன் காரரின் தொகையில் 20 ரூபாய் பிடித்துக் கொண்டு தான் பட்டுவாடா செய்றாராம். இவர் மட்டுமில்ல. மற்றவர்களும் இவரையே பின் பற்றி பொது ஜனத்துக்கு தொல்லை தராங்களாம்.
தலைவர் தேர்தல் எப்போது?
மாதந்தோறும் தவறாமல் முனிசி.,யில் உறுப்பினர்களின் கூட்டம் நடத்துவாங்க. வார்டின் பிரச்னைகளுக்கு தீர்வு காணுவாங்க. தலைவரை தேர்வு செய்யாததால், எட்டு மாதமாக கூட்டமும் நடத்துல. அவங்களுக்கு கவுரவ சம்பளத்தையும் பட்டுவாடா செய்யல.
இதனாலே மாதந்தோறும் உறுப்பினர்களுக்கு தலா 2,000 ரூபாய் வீதம் 35 உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் 70,000 ரூபாய், எட்டு மாதத்துக்கு 5 லட்சத்து 60,000 ரூபாய் வழங்கி இருக்க வேணும். இது அவர்களுக்கு எப்போ கிடைக்குமோ.
இது அரசுக்கு வேண்டுமானால் மிச்சம்னு நினைக்கலாம் அல்லது தலைவர் தேர்தல் நடத்தின பிறகு மொத்தமாக வழங்கலாம்னு இருக்கலாம். அதுவரை வார்டின் அலங்கோலத்துக்கு யார் பொறுப்பு.
ஏற்கனவே, இரண்டரை ஆண்டுகள் பதவிக் காலம் முடிந்து எட்டு மாதங்கள் கழிந்து விட்டன. கணக்கு படி பார்த்தால் இன்னும் இருப்பது 22 மாதங்கள் மட்டுமே. கவுரவ சம்பளம் வழங்கா விட்டாலும் அவர்கள் தான், வார்டின் கவுன்சிலர்கள் என்ற பதவியில் தானே இருக்காங்க.
தலைவர் தேர்தல் நடத்தாததால், இன்னும் 30 மாதங்களுக்கு பதவி இருக்குமா அல்லது பதவி நீடிக்க சட்டம் என்ன சொல்லப் போகுதோ. தலைவர் பதவிக்கு தேர்தலை நடத்தும்படி இதுவரையில் நியாயம் கேட்க யாரும் முன் வந்ததா தெரியல.