மோடியை தொடர்ந்து புகழும் தரூர் காங்., வட்டாரத்தில் உச்சகட்ட புகைச்சல்
மோடியை தொடர்ந்து புகழும் தரூர் காங்., வட்டாரத்தில் உச்சகட்ட புகைச்சல்
ADDED : மார் 20, 2025 03:41 AM
புதுடில்லி : கேரளாவின் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதி காங்., எம்.பி.,யான சசி தரூர், தெரிவிக்கும் கருத்துகள், சமீப காலமாக காங்கிரஸ் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்துகிறது.
கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி ஆட்சியில் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாக கூறினார். மேலும், பிரதமர் மோடியையும் அடிக்கடி பாராட்டி வருகிறார்.
கண்டனம்
அதன்படி, ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நிறுத்த முயற்சியில் பிரதமர் மோடியின் பங்கை நேற்று முன்தினம் வெகுவாக புகழ்ந்தார்.
இதுபற்றி அவர் பேசுகையில், 'ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக, பார்லிமென்ட்டில் நடந்த விவாதத்தின்போது, இந்தியாவின் நிலைப்பாட்டை விமர்சித்த நான், இன்று வரை என் முகத்தில் வழியும் முட்டையை துடைத்துக் கொண்டிருக்கிறேன்.
'உண்மையில், நிலையான அமைதியை ஏற்படுத்தும் வகையில், நம் நாடு இப்போது இருக்கிறது. நம்மிடம், உண்மையான ஒரு பிரதமர் இருக்கிறார்; இரண்டு நாடுகளிலும் அவர் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்' என்றார்.
சசி தரூரின் இந்த கருத்துக்கு வழக்கம்போல, காங்., கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
பாராட்டு
ஆனால், நேற்று டில்லியில் பேட்டியளித்த சசி தரூர், “இந்த விவகாரத்தில் அரசியலை நான் பார்க்கவில்லை. ஒரு இந்தியனாக நான் என் கருத்தை கூறினேன்,” என, மீண்டும் தெரிவித்தார்.
சசி தரூர் கருத்தை பாராட்டிய பா.ஜ., தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் அமித் மாளவியா, 'பிரதமர் மோடியின் பழைய வெறுப்பாளர்கள், அவரது ரசிகர்களாக மாறி வருகின்றனர்,' என தெரிவித்தார்.
பா.ஜ., மூத்த தலைவரான சம்பித் பித்ரா, 'ஐ.நா.,வில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த சசி தரூர் வழியில், தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலும் முன் வரவேண்டும்' என்றார்.