காங்கிரஸ் கட்டமைப்பை நிச்சயம் வலுப்படுத்த வேண்டும்; திக்விஜய் சிங் கருத்துக்கு சசிதரூர் ஆதரவு
காங்கிரஸ் கட்டமைப்பை நிச்சயம் வலுப்படுத்த வேண்டும்; திக்விஜய் சிங் கருத்துக்கு சசிதரூர் ஆதரவு
ADDED : டிச 28, 2025 03:55 PM

புதுடில்லி: காங்கிரசின் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்று திக்விஜய் சிங் கருத்து சரியானது தான் என்று அக்கட்சியின் எம்.பி. சசிதரூர் கூறி உள்ளார்.
டில்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய மூத்த தலைவர் திக்விஜய் சிங், கட்சியின் கட்டமைப்பை கடுமையாக சாடினார். கட்சியின் அதிகாரம் விரிவடைய வேண்டும், கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் பேசினார்.
அவரின் பேச்சு காங்கிரசுக்குள் எழுந்த கலகக்குரலாக எழுப்பப்பட, பின்னர் நிருபர்களிடம் பேசிய திக்விஜய் சிங், பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ்சை எதிர்த்தாலும் ஆர்எஸ்எஸ் கட்டமைப்பைதான் பாராட்டினேன், ஒரு அமைப்பின் வலிமையை பாராட்டியது தவறா என்று கூறினார்.
இந் நிலையில் திக்விஜய் சிங் கருத்து சரியானது தான் என்று அக்கட்சியின் எம்.பி. சசிதரூர் கூறி உள்ளார். கட்சியின் 140வது நிறுவன தினம் இன்று தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் கட்சியின் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். திக் விஜய் சிங் அருகில் அமர்ந்தபடி, எம்பி சசிதரூரும் நிகழ்வில் பங்கேற்றார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
எங்களுக்கு 140 ஆண்டுகால வரலாறு இருக்கிறது. அதில் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம். நம்மிடம் இருந்தும் கற்றுக்கொள்ளலாம். கட்சி கட்டாயம் வலுப்படுத்தப்பட வேண்டும்.
திக்விஜய் சிங் எனது நண்பர். நாங்கள் இதுபற்றி உரையாடுவது இயற்கையான ஒன்றே. கட்சியில் ஒழுக்கம் இருக்க வேண்டும். அவர் (திக்விஜய் சிங்) அவருக்காக மட்டுமே பேச முடியும்.
இவ்வாற சசிதரூர் கூறினார்.

