நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் மிரட்டல் ரூ.5 கோடி கொடுக்காவிட்டால் அவ்வளவுதான்
நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் மிரட்டல் ரூ.5 கோடி கொடுக்காவிட்டால் அவ்வளவுதான்
ADDED : அக் 19, 2024 12:36 AM
மும்பை: 'ரூபாய் 5 கோடி கொடுக்காவிட்டால் பாபா சித்திக்கை விட மோசமான நிலை சல்மான் கானுக்கு ஏற்படும்' என, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது.
ராஜஸ்தான் ஜோத்பூரில், கடந்த 1998ல் நடந்த படப்பிடிப்பு இடைவேளையில், 'சிங்காரா' எனப்படும் அரியவகை மான்களை சல்மான் கான் வேட்டையாடினார். இது தொடர்பான வழக்கு ராஜஸ்தான் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையே, தாங்கள் தெய்வமாக வழங்கும் மானை கொன்ற சல்மான் கானை கொல்ல, பஞ்சாபைச் சேர்ந்த பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் சபதம் எடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவ்வப்போது மிரட்டல்களும் சல்மான் கானுக்கு விடுக்கப்பட்டு வருகின்றன.
பந்தராவில், அவர் வசிக்கும் கேலக்சி அடுக்குமாடி குடியிருப்பு முன் கடந்த ஏப்ரலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மும்பை பன்வெல்லில் உள்ள பண்ணை வீட்டில் வைத்தும் சல்மானை கொல்ல திட்டமிடப்பட்டது.
இந்த இரு சம்பவங்களில் ஐந்து பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரபரப்புக்கு மத்தியில், தேசியவாத காங்கிரசை சேர்ந்தவரும், சல்மான் கானின் நெருங்கிய நண்பருமான பாபா சித்திக், கடந்த 12ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதில், சல்மான் கானை மிரட்டி வரும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸாப் எண்ணுக்கு நேற்று குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், 'லாரன்ஸ் பிஷ்னோய் உடனான நீண்ட நாள் பகையை முடித்துக் கொண்டு, சல்மான் கான் உயிர் பிழைத்திருக்க வேண்டுமானால், 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்.
'இல்லையென்றால், சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாபா சித்திக்கிற்கு ஏற்பட்ட நிலையை விட மோசமான செயல் அரங்கேறும். இச்செய்தியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்' என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மும்பை போலீசார், தகவல் வந்த எண் குறித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

