ADDED : ஜன 27, 2025 10:15 PM

- நமது நிருபர் -
உடுப்பி மாவட்டம், கடியலியில் அமைந்துள்ளது 1,200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினி கோவில். மகிஷாசுரமர்த்தினி என்பது துர்கா தேவியின் மற்றொரு அவதாரமாகும். மக்களின் வாழ்க்கையில் தொந்தரவு செய்து வந்த மஹிஷாசுரன் என்ற அசுரனின் கழுத்தை அறுத்து, தேவி வதம் செய்தார் என்று கூறப்படுகிறது.
மற்றொரு தகவலின்படி, அன்றைய காலகட்டத்தல் அடர்ந்த வனப்பகுதியாக இருந்த இப்பகுதியில், பல மகரிஷிக்கள், முனிவர்கள் தியானம் செய்து வந்தனர். அவ்வழியாக கையில் துர்கா தேவி சிலையை எடுத்து வந்த பிராமண இளைஞர், சோர்வடைந்தார்.
தண்ணீர் குடிக்க கிணற்றின் அருகில் உள்ள பாறையில், சிலையை வைத்தார். தண்ணீர் குடித்த பின், சிலையை துாக்க நினைத்தவரால் முடியவில்லை. அவ்வழியாக வந்த கண்வ ரிஷி முனிவரிடம், விபரத்தை கூறினார்.
முனிவர், சிலையை அங்கேயே பிரதிஷ்டை செய்தார். அன்று முதல் மஹிஷாசுரமர்தினி, கடியலியில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதாக கூறப்படுகிறது.
கருவறைக்குள் உள்ள 2 அடி உயர பளிங்கு கல்லில் செதுக்கப்பட்ட சிலை, 6ம் நுாற்றாண்டை சேர்ந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சிலைக்கு நான்கு கரங்கள் உள்ளன.
மேல் வலது கையில் பிரயாகா சக்கரம், மேல் இடது கையில் சங்கும்; வலது கீழ் கையில் திரிசூலமும்; இடது கீழே உள்ள கையில் மஹிசாசுரனின் வாலையும் பிடித்தபடி, அவன் மார்பு மீது தனது வலது கால் வைத்தபடி அருள்பாலிக்கிறார்.
சாளுக்கியர் பாணியில், இக்கோவில் கட்டப்பட்டு உள்ளது. சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோவிலில் பல ஆண்டுகளாக மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இங்கு தேவிக்கு நடக்கும் மாலை பிரார்த்தனை மிகவும் ஆற்றல் மிக்கது. இந்த பிரார்த்தனையில் பங்கேற்க, கர்நாடகாவின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
கோவிலில் பக்தர்கள் வழங்கும் காணிக்கை, நிதி நெருக்கடியில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு வழங்கப்படுகிறது. இக்கிராமத்து மக்கள், தங்கள் பாரம்பரியம், கலாசாரத்தை பின்பற்றி வருகின்றனர். கோவிலுக்குள் சென்று தியானம் செய்யும் போது, பூரண அமைதியை உணர்வீர்கள்.
மேலும் விபரங்களுக்கு 0820 - 252 1937 என்ற தொலைபேசியில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

