14.57 கி.மீ., ரயில் சுரங்கப்பாதை பணியை வேகமாக முடித்து அசத்தல்
14.57 கி.மீ., ரயில் சுரங்கப்பாதை பணியை வேகமாக முடித்து அசத்தல்
ADDED : செப் 08, 2025 12:46 AM

புதுடில்லி: உத்தராகண்டின் தேவ்பிரயாக் - ஜனசு இடையே, நாட்டின் மிக நீளமான, 14.57 கி.மீ., நீளமுள்ள ரயில்வே சுரங்கப்பாதை, துளையிடும் இயந்திர ஆப்பரேட்டர்கள் இருவரின் விடாமுயற்சியால், திட்டமிட்ட காலத்துக்கு முன்னரே துளையிட்டு முடிக்கப்பட்டது.
இமயமலையில் உத்தராகண்டின் ரிஷிகேஷ் - கர்ணபிரயாக் ரயில் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, தேவ்பிரயாக் - ஜன சு இடையே, 14.57 கி.மீ., நீளத்துக்கு இமயமலையை குடைந்து ரயில் சு ரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இது, நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதையாகும்.
அடுத்தாண்டு டிசம்பருக்குள் இத்திட்டத்தை செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்ட மிட்டுள்ளது.
தேவ்பிரயாக் - ஜனசு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணியை, பிரபல கட்டுமான நிறுவனமான, 'லார்சன் அண்டு டூப்ரோ' மேற்கொண்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திர ஆப்பரேட்டர்களான பல்ஜிந்தர் சிங், 44, ராம் அவ்தார் சிங் ராணா, 52, ஆகியோர், இரவு, பகலாக அயராது உழைத்து, திட்டமிட்ட காலத்துக்கு முன்னரே, 14.57 கி.மீ., நீளமுள்ள சுரங்கப்பாதையை துளையிட்டு பணியை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
இருவரும் ஒரு நாளைக்கு தலா 12 மணி நேரம் என, பகல் - இரவு ஷிப்டுகளில் மாறி மாறி வேலை செய்துள்ளனர்.
பணி அனுபவம் குறித்து, ஆப்பரேட்டர் பல்ஜிந்தர் சிங் கூறியதாவது:
உண்மையிலேயே, இந்த பணி ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி போல இருந்தது. வழக்கமாக, 50,000 - 60,000 கிலோ நியூட்டன்கள் சக்தியில் துளையிடும் இயந்திரத்தை இயக்குவோம்.
ஒரு முறை, சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால், பெரிய பாறைகள் போன்றவை அடித்து வரப்பட்டு சிக்கல் ஏற்பட்டது.
முழு ஆதரவு இவற்றை அகற்ற துளையிடும் இயந்திரத்தின் முழு சக்தியையும், அதாவது, -1.3 லட்சம் கிலோ நியூட்டன்கள் சக்தியில் இயக்க வேண்டிய நிலை இருந்தது. இதற்கு எங்கள் குழுவினரும் முழு ஆதரவு அளித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு ஆப்பரேட்டரான ராம் அவ்தார் சிங் ராணா கூறுகையில், ''நாங்கள், ஜெர்மனி நாட்டு தயாரிப்பான, 'சக்தி' என பெயரிடப்பட்ட துளையிடும் இயந்திரத்தை பயன்படுத்தினோம். 10 நாட்கள் அந்த இயந்திரத்தை தொடர்ச்சியாக பயன்படுத்தி துளையிடும் பணியை முன்னதாகவே முடித்தோம். அந்த இயந்திரத்துக்கு ஓய்வே கொடுக்கவில்லை,'' என்றார்.