16 கி.மீ., துாரத்தை 18 நிமிடத்தில் கடந்தது கல்லீரல் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ்
16 கி.மீ., துாரத்தை 18 நிமிடத்தில் கடந்தது கல்லீரல் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ்
ADDED : மார் 20, 2024 11:23 PM
புதுடில்லி:டில்லி விமான நிலையத்தில் இருந்து துவாரகா மருத்துவமனைக்கு கல்லீரலை பாதுகாப்பாக கொண்டு செல்ல, டில்லி மாநகர போலீஸ், சிக்னல் இல்லாத விரைவுப் பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது.
சண்டிகர் மருத்துவமனை ஒன்றில் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. அதில், கல்லீரல் மட்டும், டில்லி துவாரகாவில் உள்ள ஆகாஷ் ஹெல்த் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவருக்கு பொருத்தப்பட்டது.
சண்டிகரில் இருந்து விமானத்தில் மதியம் 1:30 மணிக்கு டில்லி விமான நிலையத்துக்கு கல்லீரல் வந்து சேர்ந்தது. அங்கிருந்து 16 கி.மீ., துாரத்தில் துவாரகாவில் உள்ள ஆகாஷ் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் கல்லீரல் கொண்டு செல்லப்பட்டது.
இதற்கான, சாலையிலும் இரு பக்கத்திலும் போலீசார் நிறுத்தப்பட்டு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது.
சிக்னல்கள் எதிலும் ஆம்புலன்ஸ் நிற்காமல் அதிவேகமாக செல்லும் வகையில் போலீசார் பசுமை வழிச்சாலையை ஏற்படுத்தி இருந்தனர்.
விமான நிலையத்தில் இருந்து 18 நிமிடங்களில் துவாரகா ஆகாஷ் மருத்துவமனைக்கு கல்லீரல் வது சேர்ந்தது.
இந்த ஆண்டில் இதுவரை எட்டு முறை இதுபோல உடல் உறுப்பு எடுத்துச் செல்லும் ஆம்புலன்சுக்காக போக்குவரத்து சீர்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 24 முறை இதேபோல உடல் உறுப்புகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

