ADDED : ஜன 12, 2024 11:21 PM
மைசூரு: தசராவை ஒட்டி, மைசூரில் 90 நாட்கள் நடந்து வந்த, தசரா கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது.
மைசூரில் ஆண்டுதோறும் நடக்கும், தசரா உலகப்புகழ் பெற்றது. தசராவை ஒட்டி, மைசூரு அரண்மனை எதிரில் உள்ள, தசரா கண்காட்சி மைதானத்தில், ஆண்டுதோறும் கலை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், கலை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம்.
மேலும் அங்கு பல்வேறு கடைகள் அமைக்கப்படடு இருக்கும். ராட்டினம் சுற்றுவது உட்பட, பொழுதுபோக்கிற்காக பல விஷயங்கள் இருப்பதால், திருவிழா கோலமாக இருக்கும். 2022ல் கொரோனா பரவலால், தசரா கண்காட்சி நடைபெறவில்லை.
ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் 15 முதல் 24ம் தேதி வரை நடந்த, பத்து நாட்கள் தசராவில், தசரா கண்காட்சியும் இடம்பெற்றது.
தசரா முடிந்த பின்னரும், தசரா கண்காட்சி தொடர்ந்து நடந்தது.
இந்த கண்காட்சிக்கு மக்களிடம் இருந்து, அதிக வரவேற்பு கிடைத்ததால், தசரா கண்காட்சி டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டது.
அதன்பின்னரும் மக்கள் வேண்டுகோள் வைத்ததால், ஜனவரி 12ம் தேதி அதாவது நேற்று வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது.
தசரா கண்காட்சியின் கடைசி நாளான நேற்று, காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மாலையில் கூட்டம் அலைமோதியது.
கடைகளில் தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மக்கள் மகிழ்ந்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, பல விளையாட்டுகளை விளையாடி உற்சாகம் அடைந்தனர்.
மின்விளக்கு அலங்காரம் முன்பு நின்று, உற்சாகமாக புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். நேற்று மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
மூன்று மாதங்கள் நடந்த, தசரா கண்காட்சியை 15 லட்சத்திற்கு அதிகமானோர் பார்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.