சவாலான நேரத்தில் வீரர்களின் வரலாற்று சாதனை: ஆண்டு வாரியாக விளக்கிய விமானப்படை தளபதி
சவாலான நேரத்தில் வீரர்களின் வரலாற்று சாதனை: ஆண்டு வாரியாக விளக்கிய விமானப்படை தளபதி
ADDED : அக் 08, 2025 10:39 AM

லக்னோ: ''நமது விமானப்படை வீரர்கள் ஒவ்வொரு சகாப்தத்திலும் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்'' என ஆண்டு வாரியாக இந்திய விமானப்படை தளபதி அமர்ப்ரீத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில்
விமானப்படை தின கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் விமானப்படை தளபதி அமர்ப்ரீத் சிங் கலந்து கொண்டார். அவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அமர்ப்ரீத் சிங் பேசியதாவது: போரில் சிறப்பாக செயல்பட்டதை தாண்டி, இந்திய விமானப்படை வீரர்கள் வெளிநாட்டிலும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு திறமையை நிரூபித்து காட்டி உள்ளனர்.
வீரம், துணிச்சல்
நமது விமானப்படை வீரர்கள் ஒவ்வொரு சகாப்தத்திலும் வரலாற்று சாதனை படைத்துள்ளனர். 1947ல் காஷ்மீரைப் பாதுகாத்தல், 1971ல் ஒரு புதிய தேசத்தை (வங்காளதேசம்) உருவாக்குதல், 1,999ல் கார்கில் போர், 2019ல் பாலகோட் தாக்குதல், இந்த ஆண்டு ஆப்பரேஷன் சிந்தூர் வரை, இந்திய விமானப்படை வீரர்கள் மூவர்ணக் கொடியைப் பாதுகாப்பதில் வீரத்தையும், துணிச்சலையும் வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஆப்பரேஷன் சிந்தூரில் விமானப்படையினர் மிகுந்த பங்களிப்பை வழங்கி உள்ளது.
உள்நாட்டு ஆயுதங்கள்
தனது சக்தியையும், திறமையையும் உலகத்திற்கு நிரூபித்து உள்ளனர். எதிரி நாட்டிற்கு துல்லியமான தாக்குதல் நடத்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் சிறந்த செயல்திறன் வெளிப்பட்டு உள்ளது.
விமானப்படை வீரர்களை அனைத்து சவாலான நேரங்களிலும், தலைவர்கள் முன்னணியில் இருந்து வழிநடத்துகிறார்கள்.
ஒவ்வொரு வீரர்களுக்கும் தேவையான பயிற்சியுடன் அதிகாரம் அளிக்கப் படுவதையும், ஊக்கமளிப்பதையும் அவர்கள் உறுதி செய்கிறார்கள். இவ்வாறு இந்திய விமானப்படை தளபதி அமர்ப்ரீத் சிங் பேசினார்.