திரிபுராவிலிருந்து சென்ற பஸ் மீது தாக்குதல் வங்கதேசத்தில் அதிகரிக்கும் அட்டூழியம்
திரிபுராவிலிருந்து சென்ற பஸ் மீது தாக்குதல் வங்கதேசத்தில் அதிகரிக்கும் அட்டூழியம்
ADDED : டிச 02, 2024 02:23 AM
அகர்தலா,: வட கிழக்கு மாநிலமான திரிபுராவிலிருந்து சென்ற பஸ் மீது, வங்கதேசத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், பயணியர் மீது குண்டுகளும் வீசப்பட்டன.
மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் இருந்து, நம் அண்டை நாடான வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா வழியாக, வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் தலைநகர் அகர்தலாவுக்கு பஸ் இயக்கப்படுகிறது.
இந்த வழியே செல்வதால், பாதி தொலைவு குறைவு என்பதுடன், விமான கட்டணத்தை விட பஸ் கட்டணம் குறைவு.
இதனால், இருநாட்டினரும் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து சென்ற பஸ் மீது வங்கதேசத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக திரிபுரா போக்குவரத்து துறை அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து திரிபுரா போக்குவரத்து அமைச்சர் சவுத்ரி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
திரிபுராவில் இருந்து மேற்கு வங்கத்தின் தலைநகர் கோல்கட்டாவுக்கு டாக்கா வழியாக சமீபத்தில் இயக்கப்பட்ட பஸ்சில் ஏராளமான இந்திய பயணியர் இருந்தனர். இந்த பஸ் வங்கதேசத்தின் பிரமான்பரியா மாவட்டத்தில் உள்ள பிஸ்வா ரோட்டில் சென்றபோது, திடீரென வந்த லாரி வேண்டுமென்றே நம் பஸ் மீது மோதியது.
இதில் முன்னால் சென்ற ஆட்டோ மீது பஸ் மோதியது. இந்த விபத்தை தொடர்ந்து பஸ்சில் இருந்து இறங்கிய இந்திய பயணியரை உள்ளூர் நபர்கள் மிரட்டினர்.
மேலும் பஸ் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன், இந்தியர்களுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் வங்கதேச அரசு இந்திய பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.