ADDED : பிப் 28, 2024 12:53 AM
புதுடில்லி, ஜம்முவின் கதுவாவில் இருந்து பஞ்சாபின் உச்சி பாசி வரை, டிரைவர் இல்லாமல் சரக்கு ரயில் தானாக ஓடிய விவகாரத்தில், அதன் டிரைவர் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் செய்த தவறுகளே காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் ஜம்முவின் கதுவா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த, 53 பெட்டிகள் உள்ள சரக்கு ரயில், திடீரென தானாக ஓடத் துவங்கியது.
ஓட ஓட அதன் வேகம் அதிகரித்து, மணிக்கு, 70 கி.மீ., வேகத்தில் சென்றது. கதுவாவில் இருந்து, பஞ்சாபின் உச்சி பாசி ரயில் நிலையம் வரை, 75 கி.மீ., துாரத்துக்கு டிரைவர் இல்லாமல் பயணித்துள்ளது.
மணல் மூட்டைகள், தடுப்பு கட்டைகள் வைத்து ரயில் நிறுத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை.
இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், அந்த சரக்கு ரயிலின் டிரைவர் மற்றும் கதுவா ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் ஆகியோர் விதிமுறைகளை சரியாக பின்பற்றாததே இந்த சம்பவத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
வழக்கமாக ஒரு ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலை நிறுத்தும்போது, 'ஹேண்ட் பிரேக்' போட வேண்டும். மேலும், ரயில் நகராமல் இருக்க, கட்டை தடுப்புகள் வைக்க வேண்டும். இவை சரியாக செய்யப்பட்டுள்ளதா என்பதை, ஸ்டேஷன் மாஸ்டர் உறுதி செய்ய வேண்டும்.
இருவருமே விதிகளுக்கு உட்பட்டு செயல்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

