முஸ்லிம் அரசு ஊழியர்களுக்கு சலுகை தெலுங்கானா அரசுக்கு பா.ஜ., கண்டனம்
முஸ்லிம் அரசு ஊழியர்களுக்கு சலுகை தெலுங்கானா அரசுக்கு பா.ஜ., கண்டனம்
ADDED : பிப் 19, 2025 01:00 AM
ஹைதராபாத், ரம்ஜான் நோன்பின் போது, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் பணி நேரத்தை தெலுங்கானா அரசு குறைத்ததற்கு பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
நடவடிக்கை
இங்கு பணியாற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அரசு பணியாளர்களுக்கு அவர்களின் புனித மாதமாக கருதப்படும் ரம்ஜான் மாதத்தின் போது, பணி நேரத்தை குறைக்கும் நடவடிக்கையை, மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
சமீபத்தில், இதுகுறித்து மாநில தலைமை செயலர் சாந்தி குமாரி வெளியிட்ட உத்தரவு:
முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜான், மார்ச் 2 - 31ம் வரை வரை கடைப்பிடிக்கப்படுகிறது. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தோர் நோன்பு இருந்து தொழுகை நடத்துவது வழக்கம்.
இதையடுத்து, அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் பணி நேரம் முடியும் முன் 1 மணி நேரத்திற்கு முன்னதாக அதாவது மாலை 4:00 மணிக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
எனினும், அத்தியாவசிய பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெலுங்கானா அரசின் இந்த அறிவிப்புக்கு பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
ஓட்டு வங்கி
இதுகுறித்து சமூக வலைதளத்தில் அக்கட்சியின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாள்வியா கூறுகையில், 'இது, முஸ்லிம் சமூக மக்களின் ஓட்டு வங்கியை குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை.
'ஆனால், இதுவே அவர்களின் ஓட்டு வங்கியின் சரிவிற்கும் காரணமாக அமையும்.
'ரம்ஜான் நோன்பிற்காக, முஸ்லிம் பணியாளர்களுக்கு சலுகை அளித்துள்ளது போல், நவராத்திரி பண்டிகையின் போது, ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கு சலுகைகள் அளிக்கவில்லை' என, குறிப்பிட்டுள்ளார்.

