இந்தியர்கள் ரத்தம் கொதிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்
இந்தியர்கள் ரத்தம் கொதிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்
ADDED : ஏப் 28, 2025 05:58 AM

புதுடில்லி : “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை பார்த்து, ஒவ்வொரு இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது. இந்த படுகொலையை நிகழ்த்திய பயங்கரவாதிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும். சொந்தங்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்,” என, பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.
புதிய வாய்ப்பு
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று, 'மன் கி பாத்' எனப்படும், 'மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
நேற்றைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
முன் எப்போதும் இல்லாத வகையில் ஜம்மு - காஷ்மீர் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தது. கட்டுமான பணிகள் வேகம் எடுத்தன.
ஜனநாயகம் வலுப்பெற்று வந்தது. சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்தது. உள்ளூர் மக்களின் வருவாய் உயர்ந்தது. இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகின.
நம் எதிரிகளால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஜம்மு - காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே, பயங்கரவாதிகளும், அவர்களை பின்னால் இருந்து இயக்குவோரும் இந்த கொடூர நாசவேலையை பஹல்காமில் நிகழ்த்தி உள்ளனர்.
அந்த புகைப்படங்களை பார்த்து ஒவ்வொரு இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது.
தண்டனை
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நாசவேலையை செய்தவர்களுக்கும், அவர்களுக்கு துணை நின்றவர்களுக்கும் மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும்.
நம் தேசத்தின் முன் உள்ள இந்த சவாலை எதிர்கொள்ளும் நம் மன உறுதியை, மேலும் வலுப்படுத்த வேண்டும். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், நம் தேசம் ஒரே குரலில் பேசுவதை உலகமே உற்று நோக்குகிறது.
உலகம் முழுதும் இருந்து கண்டன குரல்கள் ஒலிக்கின்றன. பல்வேறு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் அழைத்தும், கடிதங்கள் எழுதியும் தங்கள் கண்டனங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டனர். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த போரில், 140 கோடி இந்தியர்களுடன் இந்த உலகமே துணை நிற்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

