ADDED : ஜன 07, 2024 02:44 AM
பெங்களூரு, : பச்சைக்கல்லை பெயரில் தொழிலதிபரிடம் 51 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.
பெங்களூரின், ரிச்மண்ட் டவுனில் வசிப்பவர் தொழிலதிபர் ஷவுகத் அலி, 50. இவருக்கு அஸ்வத் பேக், ஷானவாஜ் மிர்ஜா, சாஜித் ஆகியோர் சில ஆண்டுகளாக அறிமுகம் உள்ளர்கள். 2023 ஏப்ரலில் இவரை தொடர்பு கொண்ட இவர்கள், 'எங்களுக்கு தெரிந்த நபரிடம் பச்சைக்கல் உள்ளது. அது மிகவும் விலை உயர்ந்தது. இதை 51 லட்சம் ரூபாய்க்கு வாங்கினால், கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கலாம். எங்களிடம் பணம் இல்லை. நீங்கள் வாங்கினால் அதிக விலைக்கு விற்று, இரட்டிப்பு பணம் தருவோம்' என கூறினர்.
இதை நம்பிய தொழிலதிபரும், கட்டம், கட்டமாக 51 லட்சம் ரூபாய் கொடுத்தார். பச்சை நிறத்தில் ஏதோ ஒரு கல்லுடன், தொழிலதிபர் வீட்டுக்கு வந்த மூவரும், ஒயிட் பீல்டில் உள்ள சுவாமிஜி ஒருவரிடம் அழைத்துச் சென்று, கல்லைக் கொடுத்தனர். அவர் சில நாட்கள் கல்லை வைத்திருந்த பின், “என்னால் இதை விற்க முடியவில்லை. ராஜஸ்தானின், ஜெய்ப்பூருக்கு சென்றால் எளிதில் விற்கலாம்,” என, கூறினார்.
இதை நம்பிய தொழிலதிபர், மூவருடன் ஜெய்ப்பூருக்கு சென்றார். ஒரு மாதம் அங்கிருந்தனர். ஆனால் பச்சைக்கல் விற்பனையாகவில்லை. அதன்பின் மூவரும், 'நாங்கள் கல்லை விற்று பணத்துடன் வருகிறோம். நீங்கள் பெங்களூருக்கு செல்லுங்கள்' என கூறி அனுப்பினர். ஆனால் பல மாதங்களாகியும், பணம் வரவில்லை. மூவரின் மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழிலதிபர், அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் விசாரணை நடத்துகின்றனர்.