தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், அனைத்து சொத்து விபரங்களையும் வெளியிட தேவையில்லை!
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், அனைத்து சொத்து விபரங்களையும் வெளியிட தேவையில்லை!
ADDED : ஏப் 10, 2024 01:48 AM

புதுடில்லி, 'தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், தன் அனைத்து சொத்து விபரங்களையும் வெளியிட வேண்டிய தேவையில்லை' என, வாக்காளர் உரிமை குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில், தேஜு தொகுதியில், சுயேச்சை வேட்பாளர் கரிகோ கிரி வென்றார். இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
அவர் அரசு குடியிருப்பில் தங்கியிருந்தது தொடர்பான தகவல்களை, வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை. மேலும், வரி மற்றும் கட்டண பாக்கி உள்ளதா என்பது தொடர்பான தடையில்லா சான்றிதழையும் தாக்கல் செய்யவில்லை என, குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும், அவரது மனைவி மற்றும் மகன் பெயரில், மூன்று கார்கள் பதிவு செய்யப்பட்டது தொடர்பான தகவல்களையும் சொத்து பட்டியலில் வெளியிடாமல் மறைத்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பாக விசாரித்த குவஹாத்தி உயர் நீதிமன்றம், அவரது தேர்தல் வெற்றி செல்லாது என, கடந்தாண்டு ஜூலையில் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், சஞ்சய் குமார் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒரு வேட்பாளரின் சொத்து விபரங்கள் மற்றும் வாழ்க்கை நடைமுறை குறித்து தெரிந்து கொள்வதற்கு, வாக்காளருக்கு உரிமை உண்டு. அதன்படியே, வேட்பு மனு தாக்கலின்போது சொத்து விபரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது.
அதே நேரத்தில், இதை ஒரு பொதுவான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. வாக்காளருக்கு தகவல் தெரிந்து கொள்ளும் உரிமை இருப்பதுபோல், வேட்பாளர்களுக்கும் சில தனிநபர் சுதந்திரம் உள்ளது.
அதை எங்கு, எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தாரிடம், மிகவும் விலைமதிப்புள்ள வாட்ச்சுகள் பலஇருந்தால், அந்தத் தகவல் வாக்காளருக்கு தெரிய வேண்டும்.
இதன் வாயிலாக வேட்பாளர் எவ்வளவு சொகுசான வாழ்க்கை வாழ்கிறார் என்பதை தெரிந்து கொள்ள முடியும். அதே நேரத்தில், குறைந்த விலையுள்ள, ஒரு சில வாட்ச் வைத்திருந்தால், அந்த தகவல் வாக்களர்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. அந்த தகவல்களை வேட்பு மனுவில் தெரிவிக்காததை, தகவல்களை மறைத்ததாக கருத முடியாது.
வேட்பாளர்கள், தங்களிடம் உள்ள உடைகள், காலணிகள், பாத்திரங்கள், பர்னிச்சர்கள் என, அனைத்து தகவல்களையும் தரத் தேவையில்லை. அதே நேரத்தில், அவை மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தால் தெரிவிக்க வேண்டும்.
இந்த வழக்கில், வரி, கட்டண பாக்கி உள்ளதா என்பதற்கான தடையில்லா சான்றிதழ் சமர்ப்பிக்காததால், அவர் தகவலை மறைத்ததாக கூறப்படுவது ஏற்புடையதாக இல்லை.
அதுபோல, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன், அந்த கார்களை கரிகோ கிரி, மற்றவர்களுக்கு பரிசாக அளித்துள்ளார் மற்றும் விற்பனை செய்துள்ளார். பெயர் மாற்றம் செய்யப்படாததால், அவர் தகவலை மறைத்தார் என்று கூற முடியாது.
ஓட்டளிக்கும் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தாத வரை, வேட்பாளரின் தனிப்பட்ட விஷயங்களை ஆழமாக தெரிந்து கொள்வதற்கும், அவரைப் பற்றிய ஒவ்வொரு நிமிட தகவலை தெரிந்து கொள்வதற்கும் வாக்காளருக்கு முழு உரிமை இல்லை.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
இதையடுத்து, அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

