ADDED : நவ 27, 2024 11:14 PM

கர்நாடகாவில் அணைகளுக்கு பஞ்சமில்லை. அனைத்து அணைகளுமே சுற்றுலா தலமாக மக்களை ஈர்க்கின்றன. மழைக்காலம், குளிர் காலத்தில் அணைகளுக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகம்.
மாநிலத்தில் கே.ஆர்.எஸ்., ஹேமாவதி, கபினி, ஹாரங்கி, லிங்கனமக்கி, சூபா உட்பட பல அணைகள் உள்ளன. இவற்றில் காயத்ரி அணையும் ஒன்றாகும்.
இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் உள்ளது. மழை நீரை தேக்கி மக்களுக்கும், விவசாயிகளுக்கு உதவும் நோக்கில், உடையார் காலத்தில் காயத்ரி அணை கட்டப்பட்டது.
சித்ரதுர்கா, ஹிரியூரின் ஜவனகொன்டனஹள்ளி பேரூராட்சியின் கரியாலா கிராமத்தில் சுவர்ணமுகி ஆற்றுக்கு குறுக்கே, 1963ல் காயத்ரி அணை கட்டப்பட்டது.
இதற்காக 40 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. கல், சிமென்ட் பயன்படுத்தி அணை கட்டப்பட்டது.
அன்றைய சித்ரதுர்கா மாவட்ட போர்டு தலைவராக இருந்த வக்கீல் கெஞ்சப்பா ஜெயசாமராஜ உடையார், அணைக்கு அடிக்கல் நாட்டினார். ஜெயசாமராஜ உடையார் வம்சத்தை சேர்ந்த காயத்ரி தேவியை நினைவுகூரும் வகையில் அணை கட்டப்பட்டதால் அவரது பெயரையே வைத்தனர்.
காயத்ரி அணை 17,000 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு, நீர்ப்பாசனம் வசதி செய்கிறது. 145 அடி உயரம் கொண்டதாகும். அணையின் வலது புறம் 16 கி.மீ., தொலைவிலான கால்வாயும், இடது புறம் 7 கி.மீ., தொலைவிலான கால்வாயும் உள்ளன.
இரண்டு கால்வாய்கள் வழியாக, 0.67 டி.எம்.சி., தண்ணீர் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
சித்ரதுர்கா மட்டுமின்றி, துமகூரு, சிராவின் ஹுனசேஹள்ளி, உஜ்ஜனகுன்டே, கோட்டே உட்பட பல்வேறு கிராமங்களின் விவசாய நிலங்களுக்கும் தண்ணீர் பாய்கிறது.
அணை 2017ம் ஆண்டு அக்டோபர், நவம்பரில் இரண்டு முறை நிரம்பி மடையை தாண்டியது. சுற்றிலும், பச்சை பசேல் என்ற பசுமையான இயற்கை காட்சிகள் மனதை மயக்கும்.
சில மாதங்களாக மழை பெய்ததால், காயத்ரி அணைக்கு அதிக அளவில் தண்ணீர் பாய்ந்ததால் நிரம்பியுள்ளது.
இதை காண வெளி மாவட்டங்களில் இருந்தும், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
மேகமூட்டமான வானிலை, பனிப்பொழிவு இருப்பதால், அணையின் சுற்றுப்பகுதிகளில் உடலுக்கு இதமான குளிர்ச்சியான சூழ்நிலை உள்ளது. காலை முதல் மாலை வரை அணையில் பொழுதை கழித்து விட்டு செல்கின்றனர்.
உள்ளூரில் வசிப்போர், வார இறுதி நாட்களில் காயத்ரி அணைக்கு வர மறப்பதில்லை. இங்கு நடை பயிற்சி செய்யவும் அதிகமானோர் வருகின்றனர்.
- நமது நிருபர் -