'குழந்தை மீது தாய் காட்டும் அக்கறை; எழுத்தாளர்கள் எழுத்தில் காட்டணும்'
'குழந்தை மீது தாய் காட்டும் அக்கறை; எழுத்தாளர்கள் எழுத்தில் காட்டணும்'
ADDED : ஜன 05, 2025 09:06 AM

தமிழகம் சேலத்தை பூர்வீகமாக கொண்ட, என்.சொக்கன் எனும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன், 47. இருபது ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வருகிறார்; ஐ.டி., துறையில் பணிபுரிந்து வருகிறார். தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் 60க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார். இவரது முதல் சிறுகதை, 1997ல் வெளியானது.
தொழில்நுட்பம், வாழ்க்கை வரலாறு, பழந்தமிழ் இலக்கியம், இலக்கணம் ஆகிய தலைப்புகளில் புத்தகங்கள் எழுதி உள்ளார். பணி நேரம் தவிர, மற்ற நேரத்தில் புத்தகங்கள் எழுதி வருகிறார். இவர் எழுதியதில், 'பச்சை பார்க்கர் பேனா', 'அம்பானி ஒரு வெற்றிக்கதை', 'நல்ல தமிழில் எழுதுவோம்' என்ற புத்தகங்கள் பிரபலமானவை.
இவரிடம் ஒரு அழகிய நேர்காணலை, இந்த பகுதியில் பார்ப்போமே...
கேள்வி: புத்தக வாசிப்பில் இளைஞர்களை ஈர்ப்பது எப்படி?
பதில்: தமிழில் உள்ள பெரும்பாலான புத்தகங்கள் பெரியவர்கள், சிறியவர்களுக்காகவே வெளியாகிறது. இளைஞர்களுக்கு என புத்தகங்கள் வெளியாவது குறைவு. எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் இளைஞர்களின் ரசனையை அறிந்து, புத்தகங்களை வெளியிட்டால், நிச்சயம் அவர்களை புத்தக வாசிப்பில் ஈர்க்க முடியும்.
தெளிவான சிந்தனை
கேள்வி: புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் என்ன?
பதில்: புத்தகம் வாசிப்பது போல சிறந்த, அறிவார்ந்த பொழுதுபோக்கு வேறு எதுவும் இல்லை. இதில் கிடைக்கும் சுவாரசியம் அளவிட முடியாதது. வாசிப்பு பழக்கம் உள்ளவர்களால் தெளிவாக சிந்திக்க முடியும், தங்கள் சிந்தனைகளை மேம்படுத்த முடியும். சிறுவயதில் இருந்தே புத்தக வாசிப்பில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் மற்றவர்களை விட சிறந்து விளங்க முடியும்.
கேள்வி: புது வாசகர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை?
பதில்: அவர்கள் 'காமிக்ஸ்'ல் இருந்து படிக்க துவங்கலாம்; எந்த வயதினரும் காமிக்சை படிக்கலாம். இதில் வாழ்க்கை வரலாறு, அறிவியல் என அனைத்து விதமான கருத்துக்களும் கொட்டிக் கிடக்கின்றன. சிறுவயதினர், நீதிக்கதைகளை படிப்பது சால சிறந்தது. இளைஞர்கள், நாவல்கள், காதல் கதைகள் படிக்கலாம். உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து படியுங்கள். மற்றவர்கள் சொல்கின்றனர் என்பதற்காக, கஷ்டப்பட்டு படிக்காதீர்கள்.
புதிய எழுத்தாளர்கள்
கேள்வி: எதிர்காலத்தில் எழுத்தாளர்கள் உருவாவார்களா?
பதில்: எதிர்காலத்தில் கண்டிப்பாக எழுத்தாளர்கள் வருவர். படிப்பது எப்படி ஒரு ருசியோ, அது போல எழுதுவதும் ஒரு ருசி தான். இந்த ருசியை கண்டவர்கள், நிச்சயம் புத்தகம் எழுதுவர். இளம் எழுத்தாளர்கள், வாசகர்களின் தேவையை அறிந்து கொண்டு எழுத வேண்டும்.
கேள்வி: புத்தகங்களை காசு கொடுத்து வாங்குவதா என நினைப்பவர்கள் பற்றி...
பதில்: புத்தகங்களின் விலையை காரணமாக சொல்வோர், படிக்க விரும்பாதவர்களாக இருப்பர். வாசிப்பிற்கு பணம் தடையாக இருந்தால், குறைந்தது ஒரு புத்தகமாவது வாங்கி படிக்கலாம். இல்லையெனில், நுாலகத்திற்கு சென்று இலவசமாக படிக்கலாமே.
ஈர்ப்பு அதிகம்
கேள்வி: உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்?
பதில்: கம்பர், பாரதியார், கல்கி, சுஜாதா. பழந்தமிழ் இலக்கியங்களில் ஈர்ப்பு அதிகம் உள்ளதால், நவீன கால எழுத்தாளர்களின் படைப்பை படிப்பதில்லை.
கேள்வி: நீங்கள் எழுத்தாளராக ஆனது எப்படி?
பதில்: சிறுவயதில், ஒரு விபத்தில் சிக்கிய என் அத்தை கண் பார்வை இழந்துவிட்டார். இதனால், அவர் என்னை நாளிதழ்கள், புத்தகங்கள் படிக்கச் சொல்வார். அத்தைக்கு படித்துக் காட்டும்போது, எனக்கும் புத்தகங்களின் மீதான ஈர்ப்பு அதிகமானது. இந்த ஈர்ப்பு என்னை ஒரு எழுத்தாளராக மாற்றியது.
பெரிய எழுத்தாளர்
கேள்வி: உங்களை பெரிய எழுத்தாளராக நினைப்பது உண்டா?
பதில்: சில நேரங்களில் வாசகர்கள் யாராவது பாராட்டும்போது, அந்த கணத்தில் பெருமையாக நினைப்பது உண்டு. கடினமாக உழைத்துள்ளேன். எனவே, அதை விட்டுக்கொடுக்க மாட்டேன். அதுபோல, என் புத்தகத்திற்கு எத்தகைய விமர்சனம் வந்தாலும், ஏற்றுக்கொள்வேன். நெகடிவ் விஷயங்களை மனதிற்குள் போட்டு குழப்பிக் கொள்ள மாட்டேன்.
கேள்வி: எழுத்தாளரின் தகுதி என்ன?
பதில்: வாசகரை முட்டாளாக நினைத்து எழுதக் கூடாது. குழந்தைக்கு சமையல் செய்யும் தாய், உணவில் காட்டும் அக்கறையை, எழுத்தாளர்கள் எழுத்தில் காட்ட வேண்டும். இப்படி செய்தால் வாசகர்கள் புத்தகத்தையும், எழுத்தாளரையும் நிச்சயம் கொண்டாடுவர்.
இவ்வாறு அவர் அனுபவித்து கூறினார்.
- நமது நிருபர் -