தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பினராயி விஜயன், அவரது மகள் மீது வழக்கு பாய்கிறது!

பினராயி விஜயன், அவரது மகள் மீது வழக்கு பாய்கிறது!

பினராயி விஜயன், அவரது மகள் மீது வழக்கு பாய்கிறது!


UPDATED : அக் 10, 2026 05:12 AM

ADDED : அக் 09, 2026 07:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 05:12 AM ADDED : அக் 09, 2026 07:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொச்சி: ‘சி.எம்.ஆர்.எல்., – எக்ஸாலாஜிக்’ தொடர்புடைய லஞ்ச வழக்கில், அமலாக்கத் துறையின் அறிக்கையின் அடிப்படையில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த கேரள முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன், 81, அவரது மகள் வீணா உள்ளிட்டோர் மீது, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவலறிக்கை பதிவு செய்யும்படி, உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனால், பினராயி விஜயனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில், காங்கிரசைச் சேர்ந்த முதல்வர் சதீசன் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2016 –- 26 வரை மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பினராயி விஜயன் முதல்வராக பதவி வகித்தார். அப்போது, 2017ல், அவரது மகள் வீணாவுக்கு சொந்தமான, தற்போது செயல்பாட்டில் இல்லாத, ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ என்ற ஐ.டி., நிறுவனத்துக்கு, எந்தவொரு தகவல் தொழில்நுட்ப சேவையும் பெறாமல், 2.78 கோடி ரூபாயை, சி.எம்.ஆர்.எல்., எனப்படும், ‘கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூட்டைல்லிமிடெட்’ நிறுவனம் வழங்கியது, வருமான வரித்துறை சோதனையில் தெரிய வந்தது.

இதன்படி, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த அமலாக்கத் துறை, பினராயி விஜயன், வீணா, அவரது கணவரும், முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸ் தொடர்புடைய இடங்களில், கடந்த மே மாதம் சோதனை நடத்தியது.

கேரளாவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில், பினராயி விஜயன், வீணா உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர்., பதிய கோரி, கடந்த மாதம் மாநில போலீசுக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியது. எனினும், காங்., அரசு தீவிரம் காட்டவில்லை.

இந்நிலையில், ‘சி.எம்.ஆர்.எல்., –- எக்ஸாலாஜிக்’ லஞ்ச வழக்கில், அமலாக்கத் துறை அறிக்கையின் அடிப்படையில், பினராயி விஜயன், வீணா உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர்., பதிய கோரி, வழக்கறிஞர் கே.எம்.ஷாஜஹான் என்பவர், கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஏ.பதருதீன் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘தாங்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே பினராயி விஜயன், அவரது மகள் வீணா உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர்., பதியலாம். ஆனால், கேரள போலீசார் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துகின்றனர்’ என, அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கேரள அரசு தரப்பு வழக்கறிஞர்கள், ‘அமலாக்கத் துறையின் அறிக்கை மட்டுமே எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய போதுமானதாக இருக்காது. மாநில போலீசார் முறைப்படி முதற்கட்ட விசாரணை நடத்த வேண்டியது அவசியம்’ என்றனர்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஏ.பதருதீன், பினராயி விஜயன், வீணா உட்பட குற்றம் சாட்டப்பட்டோர் மீது, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், எப்.ஐ.ஆர்., பதிய உத்தரவிட்டார்.

இது குறித்து, மார்க்சிஸ்ட் ராஜ்யசபா எம்.பி., ஜான் பிரிட்டாஸ் கூறுகையில், ‘‘மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம், பினராயி விஜயனுக்கு நெருக்கடி தரப்படுகிறது. இந்த வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வோம். இந்த விவகாரத்தில், சி.எம்.ஆர்.எல்., நிறுவனத்திடம் இருந்து காங்., கூட்டணி தலைவர்களும் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. அது குறித்தும் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்,’’ என்றார்.

பா.ஜ., தலைவர் ஷோன் ஜார்ஜ் கூறுகையில், ‘‘நாங்கள் நீண்ட காலமாக சொல்லி வந்த உண்மை, தற்போது நீதிமன்ற உத்தரவு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளதால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடிக்க பினராயி விஜயனுக்கு தகுதி இல்லை. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us