ADDED : பிப் 13, 2024 07:05 AM
குடகு: விபத்தை ஏற்படுத்தி வாலிபரின் மரணத்துக்கு காரணமானவர், தற்கொலை செய்து கொண்டார்.
குடகு, மடிகேரியின் ஹெரவநாடு கிராமத்தை சேர்ந்தவர் தம்மையா, 57. இவர் பிப்ரவரி 9ல், பணி நிமித்தமாக பைக்கில் புறப்பட்டார். மடிகேரி - மைசூரு தேசிய நெடுஞ்சாலை - 278ல் செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், எதிரே வந்த மற்றொரு பைக் மீது மோதியது.
மோதிய வேகத்தில், சோமவார்பேட்டின், கான்டனகொல்லி கிராமத்தில் வசிக்கும் ககன் சுப்பையா, 23, கீழே விழுந்தார். இவர் மீது லாரி மோதியில் தலையில் காயமடைந்து, மடிகேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கூடுதல் சிகிச்சைக்காக, மைசூரின் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
தன்னால் தான் விபத்து நடந்தது என, மனம் நொந்த தம்மையா, போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறிவிட்டு வீட்டுக்கு சென்றார். நன்றாக வாழ வேண்டிய வாலிபரின் நிலை இப்படி ஆகிவிட்டதே, தானே இதற்கு காரணம் என, நினைத்து வருந்தினார். யாரிடமும் பேசவில்லை.
சிகிச்சை பலனின்றி, ககன் சுப்பையா நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தம்மையா, நேற்று காலை தன் காபி தோட்டத்துக்கு சென்று, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மடிகேரி போலீசார் விசாரிக்கின்றனர்.