டாக்டர் கொலை விசாரணை மிக தீவிரமாக நடப்பதாக உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தகவல்
டாக்டர் கொலை விசாரணை மிக தீவிரமாக நடப்பதாக உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தகவல்
ADDED : அக் 16, 2024 02:48 AM
புதுடில்லி, அக். 16-
கோல்கட்டாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், விசாரணை மிக தீவிரமாக நடந்து வருவதாக, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் செயல்படும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லுாரியில், 31 வயதான பயிற்சி பெண் டாக்டர், ஆக., 9ல், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
சி.பி.ஐ., விசாரித்து வரும் இந்த வழக்கில், போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கு விசாரணை தொடர்பான ஐந்தாவது நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து, அவர் கூறுகையில், ''இந்த வழக்கில், விசாரணை மிக தீவிரமாக நடந்து வருகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட சஞ்சய் ராய்க்கு எதிராக, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை, கோல்கட்டாவில் உள்ள சீல்டா நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த விவகாரத்தில் மற்ற நபர்களின் பங்கு குறித்தும் விசாரணை நடக்கிறது,'' என்றார்.
இதை கேட்ட அமர்வு, விசாரணை தொடர்பான அடுத்த நிலை அறிக்கையை, மூன்று வாரங்களுக்குள் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.
முன்னதாக, டாக்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நெறிமுறையை உருவாக்க, 10 பேர் அடங்கிய தேசிய பணிக்குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த பணிக்குழுவின் கூட்டங்கள், செப்., முதல் வாரத்தில் இருந்து நடக்கவில்லை என, நேற்றைய விசாரணையின் போது குறிப்பிட்ட அமர்வு, அவ்வப்போது கூட்டங்கள் நடக்க வேண்டும் என, கூறியது.
மேலும், கோல்கட்டா டாக்டர்களின் பாதுகாப்பு குறித்த பரிந்துரைகளை மூன்று வாரங்களுக்குள் வகுக்கும்படி அமர்வு உத்தரவிட்டது.
இதற்கிடையே, டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு, கோல்கட்டாவில் பயிற்சி டாக்டர்கள் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் 10வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.