கடன் பிரச்னை: கேரள அரசுடன் பேச்சு நடத்த தயார் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
கடன் பிரச்னை: கேரள அரசுடன் பேச்சு நடத்த தயார் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
ADDED : பிப் 13, 2024 11:15 PM

புதுடில்லி,கடன் உச்ச வரம்பு விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, கேரள அரசுடன் பேச்சு நடத்தி தீர்வு காண தயார் என, மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் வாங்குவதற்கு மத்திய அரசு உச்ச வரம்பு விதித்திருப்பதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்தது.
இது தொடர்பாக பதிலளிக்கும்படி, கடந்த மாதம் 12ம் தேதி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில், மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 7ம் தேதி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.
அதில், 'பொது நிதி மேலாண்மை என்பது தேசிய பிரச்னை. மாநிலங்கள் கடன் வாங்குவது, நாட்டின் கடன் மதிப்பீட்டை பாதிக்கிறது.
மேலும், எந்தவொரு மாநிலமும் கடனை திருப்பிச் செலுத்த தவறினால், நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதோடு, ஒட்டுமொத்த நிதி கட்டமைப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்' என, குறிப்பிட்டிருந்தது.
இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியிடம் நீதிபதிகள், ''இவ்விவகாரத்தில் கேரள அரசின் நிதித்துறை செயலர், மத்திய நிதியமைச்சரை சந்தித்து பேச்சு நடத்தி சமரச தீர்வு காண நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதா,'' என, கேள்வி எழுப்பினர்.
இதைக்கேட்ட அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி, ''உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று கேரள அரசுடன், எவ்வித நிபந்தனையும் இன்றி பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது,'' என்றார்.
இதற்கு கேரள அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பேச்சு நடத்த தயார் என தெரிவித்தார்.
இதைக்கேட்ட நீதிபதிகள் தங்கள் பிறப்பித்த உத்தரவில், 'மத்திய நிதியமைச்சருடன் கேரள அதிகாரிகள் சந்திப்பு கூட்டம் நடத்தி முடித்தபின் அடுத்த வாரத்தில் மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்' எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.