'லவ் ஜிஹாத்'துக்கு எதிரான மத்திய அரசின் போர் துவங்கியது!
'லவ் ஜிஹாத்'துக்கு எதிரான மத்திய அரசின் போர் துவங்கியது!
UPDATED : ஜூலை 13, 2025 01:14 AM
ADDED : ஜூலை 13, 2025 01:08 AM

புதுடில்லி: மாற்று மதப்பெண்களை காதல் வயப்படுத்தி, மதம் மாற்றி திருமணம் செய்து கொள்ளும், 'லவ் ஜிஹாத்' சதிவலை, 'டெலிகிராம், டிண்டர்' உள்ளிட்ட சமூகவலைதளங்கள் வாயிலாக அதிகரித்து வருகிறது. இந்த, 'டிஜிட்டல் லவ் ஜிஹாத்'தை கட்டுப்படுத்துவதற்காக, சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணிக்கும் பணியில் மத்திய புலனாய்வு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.
திருமணம் என்ற பெயரில் ஹிந்து பெண்களை, முஸ்லிம் இளைஞர்கள் கட்டாய மதமாற்றம் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு, கடந்த சில ஆண்டுகளாக அதிகரிக்க துவங்கியுள்ளது.
அவ்வாறு கட்டாய மத மாற்றங்கள் செய்யப்படுவது, 'லவ் ஜிஹாத்' என அழைக்கப்படுகிறது.
இதை தடுக்க உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற பா.ஜ., ஆளும் மாநிலங்களில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில், புதிய சட்டம் கொண்டு வரப்படுவது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
லவ் ஜிஹாத் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ., - என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை போன்றவை விசாரித்து வருகின்றன.
மாறி வரும் சூழலுக்கு ஏற்ப, லவ் ஜிகாத்தை டிஜிட்டல் முறையில் அரங்கேற்றும் செயல்கள் அதிகரித்து வருவதாக, புலனாய்வு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, 'இன்ஸ்டாகிராம், டெலிகிராம், டிண்டர், சிக்னல்' போன்ற சமூகவலைதளங்களின் வாயிலாக மதமாற்ற நடவடிக்கைகள் டிஜிட்டல் ஜிஹாத்தாக வடிவெடுத்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதன்மை இலக்கு
உளவுத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள், இது போன்ற சமூக வலைதள அமைப்புகளை பயன்படுத்தி, ஹிந்து பெண்களை குறிவைத்து மதமாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது உறுதியாகியுள்ளது.
மொத்தம், 2,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட, 'ஜய்துன் கவுன்சில்' என்ற ரகசிய, 'டெலிகிராம்' குழு, கேரளாவிற்கும், மேற்கு வங்கத்திற்கும் இடையிலான எல்லை தாண்டிய நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதும் அம்பலமாகியுள்ளது.
இந்தக் குழு, மதமாற்றத்துக்கான ஆட்சேர்ப்பு இலக்குகள், சித்தாந்த உள்ளடக்கம், நிதி ஆதாரங்களை ஒருங்கிணைத்தது தெரியவந்துள்ளது.
புதிதாக மதம் மாறிய பெண்களுக்கு, இதற்கென பிரத்யேகமாக அடையாள அட்டை வழங்கப்பட்டு, டிஜிட்டல் தளத்தில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
2018 - 24 இடையிலான காலக்கட்டத்தில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள், மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
மதமாற்ற செயலுக்காக, கோடிக்கணக்கில் வெளிநாட்டு நிதியுதவியை இஸ்லாமிய அமைப்பினர் பயன்படுத்தி வருவதாக, புலனாய்வு அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக, 15 - 24 வயதுடைய இளம்பெண்கள், இந்த நடவடிக்கைக்கு முதன்மை இலக்குகளாக உள்ளனர்.
நம் அண்டை நாடான நேபாளம், வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள துபாய் வாயிலாக, இங்குள்ள சில இஸ்லாமிய அமைப்புகளுக்கு நிதியுதவிகள் அளிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
மதமாற்றத்துக்கு ஆள்சேர்ப்பதற்காகவே, நம் நாட்டில் முக்கிய நகரங்களில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளுக்கு யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை முறையில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியுள்ளதாக கூறப்படுகிறது.
இளம்பெண்களை மதமாற்றம் செய்வதற்காகவே, ஆண்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
மத்திய பிரதேசத்தில் உள்ள 'போபால் செமினரி நெக்சஸ்' என்ற அமைப்பின் கீழ் செயல்படும், தாருல் உலும் தாஸ்கியா போன்ற நிறுவனங்கள், 16 - 22 வயது வரையிலான சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இது தொடர்பான சித்தாந்த பயிற்சியை வழங்குகின்றன.
கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் இந்த பயிற்சிகள் நடத்தப்படுவதாக உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக, 2018 - 24 காலக்கட்டத்தில், தோஹா மற்றும் ஷார்ஜாவில் இருந்து 18.5 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் போபாலில் உள்ள செமினரி எனப்படும் பயிற்சி பள்ளிக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.
கடந்த ஆறு ஆண்டுகளாக, மதமாற்றம் தொடர்பாக ஏராளமான வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்புகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் தந்த ரகசிய தகவல்கள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், சமூக வலைதளங்களுக்கான கட்டுப்பாடுகளை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், வெளிநாடுகளில் இருந்து அரசு சாரா நிறுவனங்களுக்கு வரும் நிதியுதவிகளை கண்காணித்து, கட்டுப்பாடுகள் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நம் நாட்டின் சமூக அமைப்பை சத்தமின்றி சீர்குலைக்கும் டிஜிட்டல் ஜிஹாத்துக்கு எதிரான போரை மத்திய அரசு துவங்கியுள்ளது.