மலர்ந்தும் மலராத தாமரையின் கோளாறு கோலாரில் சலபதிக்கு காத்திருக்கும் சவால்கள்
மலர்ந்தும் மலராத தாமரையின் கோளாறு கோலாரில் சலபதிக்கு காத்திருக்கும் சவால்கள்
ADDED : பிப் 05, 2025 06:48 AM

கோலார் மாவட்டத்தில் 2018 சட்டசபை தேர்தல் பா.ஜ.,வுக்கு இறங்கு முகமாக இருந்தது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், 2019 லோக்சபா தேர்தலில், கோலார் தொகுதியில் வெற்றிக்கனியை பறித்தது.
பா.ஜ., - எம்.பி.,யாக முனிசாமி இருந்த காலத்தில் நடந்த பல போராட்டங்களில் அவர் முன்னணியில் இருந்தார். இதனால் மாவட்டத்தில் பா.ஜ., முகாமில் பரபரப்பு காணப்பட்டது.
ஆனாலும், 2023 சட்டசபை தேர்தலில் ஆறு தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. இதில் மூன்று தொகுதிகளில் டிபாசிட்டை இழந்தது.
இருப்பினும், 2024 லோக்சபா தேர்தலில் கூட்டணியை காப்பாற்றுவதற்காக கோலார் தொகுதியை ம.ஜ.த.,வுக்கு பா.ஜ., விட்டுக் கொடுத்தது. இதனால் எம்.பி., பதவி ம.ஜ.த.,வுக்கு சென்றது.
இலவு காத்த கிளி
பா.ஜ.,வோ இலவு காத்த கிளியாகி விட்டது. முனிசாமி சிறப்பு விருந்தினராக மாறி விட்டார். தொகுதிக்கு எப்போதாவது தான் வருவார். கோலார் மாவட்டத்தில், 'மாஜி'க்களாக மாறிய எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணய்ய ஷெட்டி, வெங்கட முனியப்பா, எம்.நாராயணசாமி, சம்பங்கி, ராமக்கா; மாஜி எம்.எல்.சி.,யான ஒய்.ஏ.நாராயணசாமி ஆகியோர் இருக்கும் இடம் தெரியாமல், 'பேசா மடந்தை'யாக உள்ளனர்.
மாநிலத்தில் பூசல் அதிகரித்திருப்பது போல, கோலார் மாவட்டத்திலும் அதே கதை தான். இங்குள்ள ஆறு தொகுதிகளிலும் ஏட்டிக்கு போட்டியாக கட்சியினர் உள்ளனர். மொத்தத்தில், மாவட்டத்தில் பா.ஜ., மலராமல் மொட்டாகவே உள்ளது.
எதிர்பார்ப்பு
இச்சூழலில் தான், பா.ஜ., மாவட்ட தலைவராக ஓம் சக்தி சலபதி பொறுப்பேற்று உள்ளார். இவருக்கு கட்சியை நடத்துவதில் பெரும் சவால் உள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்றாண்டுகள் உள்ளன. இந்த ஆண்டு இறுதியில் நகராட்சி, டவுன் சபை தேர்தல், தாலுகா மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல்களும் நடக்க உள்ளன. இதை ஓம்சக்தி சலபதி எவ்வாறு எதிர்கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கு நெருக்கமானவர் சலபதி. கோலார் நகர மேம்பாட்டு குழும முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். மூத்த செயல் வீரர். முன்னாள் மாவட்ட செயலர், யுவ மோர்ச்சா மாவட்ட தலைவர், மாநில செயலர், மாவட்ட துணை தலைவர் என பல பதவிகளை வகித்தவர். இவர் 2018 சட்டசபை தேர்தலில், கோலார் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இவரது நியமனத்துக்கு கோலார் பா.ஜ.,வில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால், இவர்கள் எல்லாரும் சிறிய பொறுப்பில் உள்ளவர்களே. இதற்கு முன் தலைவராக இருந்த டாக்டர் வேணுகோபாலும் மவுனம் சாதிக்கிறார். கட்சியில் நிலவும் கருத்து வேறுபாடுகளை சலபதி எப்படி சரி செய்வார் என்பது போக போகவே தெரியும்
. - நமது நிருபர் -