அதிகாலை 3:30 மணிக்கு யோகா பயிற்சி செய்கிறார் தலைமை நீதிபதி
அதிகாலை 3:30 மணிக்கு யோகா பயிற்சி செய்கிறார் தலைமை நீதிபதி
ADDED : பிப் 22, 2024 11:42 PM

புதுடில்லி, ''பணி ரீதியிலான நெருக்கடிகள் எவ்வளவு இருந்தாலும், அதையெல்லாம் விரட்டி, மனம் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். நான் அதிகாலை 3:30 மணிக்கு யோகா செய்கிறேன். கட்டுப்பாடான சைவ உணவை எடுத்துக் கொள்கிறேன்,'' என, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார்.
மத்திய அரசின் ஆயஷ் அமைச்சகம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் ஆயுஷ் உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையம் துவக்கப்பட்டுள்ளது. இதை நீதிபதிகள், அவர்களுடைய குடும்பத்தினர், உச்ச நீதிமன்றப் பணியாளர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.
இதை நேற்று துவக்கி வைத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறியுள்ளதாவது:
நான், சக நீதிபதிகள், உச்ச நீதிமன்ற பணியாளர்கள் என, அனைவரும், கடுமையான பணி நெருக்கடியில் உள்ளோம். இதுபோன்ற மையங்கள், உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க நிச்சயம் உதவும்.
நான் தினமும் அதிகாலை 3:30 மணிக்கு யோகா பயிற்சி செய்கிறேன். கடந்த சில மாதங்களுக்காக கட்டுப்பாட்டுடன் கூடிய சைவ உணவுகளையே எடுத்து கொள்கிறேன். உணவுக் கட்டுப்பாடு என்பதை வாழ்க்கையின் நடைமுறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.