சிவராஜ்குமாரிடம் நலம் விசாரித்தார் முதல்வர் சித்தராமையா
சிவராஜ்குமாரிடம் நலம் விசாரித்தார் முதல்வர் சித்தராமையா
ADDED : ஜன 28, 2025 06:27 AM

பெங்களூரு : புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து, வீடு திரும்பிய நடிகர் சிவராஜ்குமாரிடம், முதல்வர் சித்தராமையா நேற்று நேரில் நலம் விசாரித்தார்.
கன்னட திரையுலகில் முன்னனி நட்சத்திரங்களில் ஒருவர் சிவராஜ்குமார். இவர் ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிலும் பிரபலமானார்.
இவர் சமீப காலமாக சிறுநீரக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். டிச., 18ம் தேதி அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றான மியாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
நேற்று முன்தினம் பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்திற்கு வந்தார். அவரை ரசிகர்களும், திரையுலகினரும் திரண்டு வரவேற்றனர்.
நேற்று நாக்வாராவில் உள்ள சிவராஜ்குமார் வீட்டிற்கு முதல்வர் சித்தராமையா சென்றார். சிவராஜ்குமார், அவரது மனைவி இருவரிடமும் முதல்வர் நலம் விசாரித்தார். முதல்வரின் வருகையால் சிவராஜ்குமார் மகிழ்ச்சியில் திகைத்தார்.
பின், செய்தியாளர்களிடம் முதல்வர் கூறுகையில், “அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே சிவராஜ்குமாருக்கு போன் செய்து விசாரித்தேன். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது, எவ்வித பிரச்னையும் இல்லை என அவர் பதிலளித்தார். தற்போது அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்,” என்றார்.

