ADDED : ஆக 10, 2025 06:21 AM

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். பிற்பட்டோருக்கு கல்வி, வேலை, உள்ளாட்சிகளில் 42 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வகை செய்யும் மசோதா தெலுங்கானா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பப்பட்டது; கவர்னர், இதை ஜனாதிபதிக்கு அனுப்பிவிட்டார்.
கிட்டத்தட்ட மாதங்களாகி ஐந்து மாதங்களாகியும், இதுவரை ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கவில்லை. மத்திய அரசின் போக்கை எதிர்த்து, டில்லி ஜந்தர் மந்திரில், ரேவந்த் ரெட்டி போராட்டமும் நடத்தினார். 'இதெல்லாம் வெறும் வேஷம்' என, முதல்வர் ரேவந்த் ரெட்டியை குறை கூறுகின்றனர் காங்கிரசார்.
ரேவந்த் ரெட்டி தன் அரசியல் வாழ்க்கையை, 'அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்' எனும் அமைப்பில் துவக்கினார்; இந்த அமைப்பு, ஆர்.எஸ்.எஸ்.,சின் மாணவர் பிரிவு.
'ரெட்டிக்கு, ஆர்.எஸ்.எஸ்.,சிலும், பா.ஜ.,விலும் நண்பர்கள் உள்ளனர். மோடியை எதிர்த்து பேசினால், ராகுல் மகிழ்ச்சியடைவார்; இதனால், தன்னை குறித்து யாரும் அவரிடம் போட்டுக் கொடுக்க மாட்டார்கள். இதுதான், ரெட்டி யின் திட்டம். எனவே, மோடியை கண்டபடி விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.
தனக்கு போட்டியாக யாரும் வரக்கூடாது என்பதால், இப்படி செயல்படுகிறார். இது, பா.ஜ.,விற்கும் தெரியும்' என்கின்றனர் தெலுங்கான காங்., தலைவர்கள்.
இன்னொரு விஷயத்தையும் காங்கிரசார் முன் வைக்கின்றனர். தெலுங்கானாவின் மிகப் பெரிய திட்டம், காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டம். 80,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த அணை திட்டத்தால், 20 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.
'முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான, சந்திரசேகர ராவ் உள்ளிட்ட அவரது கட்சியினர், இதில் ஊழல் செய்துள்ளனர்' என, நீதிபதி பி.சி.கோஷ் கமிட்டி அறிக்கை அளித்துள்ளது.
'ராவ் கைதாவார் என, அனைவரும் எதிர்பார்த்துள்ள நிலையில், ரேவந்த் ரெட்டி அவரை கைது செய்யாமல் இருக்கிறார்; இதுவும் ரேவந்த் ரெட்டியின் ஒரு சதித்திட்டம்' என. உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கின்றனர் காங்கிரசார்.