கர்நாடக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்ய தயாராகிறார் முதல்வர்
கர்நாடக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்ய தயாராகிறார் முதல்வர்
ADDED : பிப் 01, 2024 11:07 PM

பெங்களூரு: வாக்குறுதிகளை அமல்படுத்தியதால், கர்நாடகா திவாலாகிவிட்டதாக பா.ஜ., கூறும் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதி ஒழுங்குமுறை மீறல் மற்றும் மத்திய மானியங்களில் வெட்டுகள் குறித்து வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்ய முதல்வர் சித்தராமையா தயாராகி வருகிறார்.
'கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பின், மாநிலத்தின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் தெரிவித்திருந்தார்.
சவால் ஏற்பு
இதை சவாலாக முதல்வர் சித்தராமையா ஏற்றுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக, 2018ல் ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முதல்வராக குமாரசாமி இருந்த காலகட்டம், பா.ஜ., ஆட்சியில் இருந்த காலகட்டங்களில் நிதி நிலைமை எப்படி இருந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதி ஒழுங்குமுறை மீறல் மற்றும் மத்திய மானியங்களில் வெட்டுகள் குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் உத்தரவுப்படி, 'அவரது அமைச்சக அதிகாரிகள், நிதித்துறை உயர் அதிகாரிகள், வெள்ளை அறிக்கைக்கு தேவையான தகவல்களை சேகரித்து வருகின்றனர். பிப்., 12ம் தேதி துவங்கும் சட்டசபை கூட்டத்தொடரில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்ற தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
என்ன உள்ளது?
வரி பங்கீட்டில் நடந்த அநீதி, மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு வந்திருக்க வேண்டிய மானியங்கள், உதவிகள் குறைப்பு.
கடந்த 2018ல் மத்திய அரசின் பட்ஜெட் அளவு, 25 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது அப்போது கர்நாடகா அரசு, மத்திய அரசிடம் இருந்து 50,000 கோடி ரூபாய் பெற்றது. இப்போது மத்திய பட்ஜெட்டின் அளவு 45 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இப்போதும் கர்நாடகாவுக்கு மத்திய அரசிடம் இருந்து 50,000 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கிறது.
பட்ஜெட் அளவு அதிகரிப்புக்கு ஏற்ப, மாநிலத்துக்கு வழங்கும் நிதியும் அதிகரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்த தகவல் இடம் பெற உள்ளது.
வரி வளர்ச்சி விகிதம்
ஜி.எஸ்.டி., என்ற சரக்கு சேவை வரி அமல்படுத்துவதற்கு முன்பு, கர்நாடகாவின் வரி வளர்ச்சி விகிதம், 16 சதவீதமாக இருந்தது. ஜி.எஸ்.டி.,க்கு பின், வரி வளர்ச்சி விகிதம் 9 சதவீதமாக குறைந்து உள்ளது.
இதனால், மாநில அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நஷ்டத்தை ஏற்க வேண்டிய மத்திய அரசு, ஜி.எஸ்.டி.,யில் நியாயமான பங்கை வழங்காமல், மாநிலத்தை ஏமாற்றி வருவதாகவும் இடம் பெற உள்ளது.
ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும், பா.ஜ., ஆட்சியிலும் பொதுப்பணி துறை, நீர்வளம், சிறு பாசனம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் உட்பட பல்வேறு துறைகளில் நிதி ஒழுங்கை மீறி, பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் அனுமதிக்கப்பட்டன.
கடந்த 2022 - 23 நிதி ஆண்டின் இறுதியில், கர்நாடகாவில் 2.55 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நிலுவையில் இருந்தன.
இந்த காலகட்டத்தில் நிதி ஒழுங்குமுறையை மீறி அனுமதிக்கப்பட்ட பணிகள் குறித்த விபரங்களும் இதில் சேர்க்கப்படும் என, வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

