ADDED : அக் 27, 2024 11:03 PM

ஆரம்ப கால கங்க மன்னர்கள் அன்றைய நாளில் 'குலுவலா' என அழைத்த இன்றைய கோலாரை தலைநகராக கொண்டு அவர் ஆட்சி செய்திருந்தார்.
அதன் பின்னர் பத்தாம் நுாற்றாண்டின் இறுதி காலத்தில் கோலார் உட்பட அன்றைய தமிழகத்தின் வடக்கு பகுதிகள் சோழ மன்னர்கள் ஆட்சியில் இருந்ததை, இன்றைய தங்கவயலின் வடக்கே 30 கிலோ மீட்டர் துாரத்தில் இருக்கும் ஆவணி குன்றுகளின் அடிவாரத்தில் உள்ள, கோவில்களின் அமைப்பு, அவற்றில் பழந்தமிழில் செதுக்கப்பட்ட உள்ள சாசனங்களின் மூலமாகவும் அறியப்படுகிறது.
திருச்சியை அடுத்த உறையூரை தலைநகராக கொண்டு, ஆட்சி புரிந்த ராஜராஜ சோழன் கி.பி. 977ல் கோலாரை அடுத்துள்ள ஹொஸ்கோட் ஐ கைப்பற்றி, இப்பகுதியில் தனது வெற்றியின் சின்னமாக ஹிந்து கோவில்கள் பலவற்றை கட்டி உள்ளார்.
கோலாரில் கோலாரம்மா கோவிலும் சோழர் கட்டின கோவிலாகும். அவரது மகன் ராஜேந்திரசோழர் கி.பி., 1004ல் காவிரி கரையில் உள்ள தலைக்காட்டை வென்று, தலைநகராக ஆக்கி, அவரும் தமது அதிகார சின்னமாக கோவில்களை கட்டினார்.
தலைக்காடு
தாழை மலர்ச்சோலைகள் சூழ்ந்து இருந்ததால், தாளைக்காடு என வழங்கிய தலைக்காடு, காவிரி வெள்ளத்தால் மணலால் மூடப்பட்டு, இன்று பாலைவனமாக காட்சியளிக்கிறது.
கோலாலபுரம் என்பது தான் குவலாலயம் என வழங்கிய கோலார் பட்டினம் என்பது வரலாற்று சிறப்புமிக்க தலைநகரங்களில் ஒன்றாகும். 2,000 ஆண்டுகளாக சிறப்பு பெற்ற கோலாரின் பெயரால், தங்கம் விளையும் 'கோலார் கோல்டு பீல்டு' என்பதன் சுருக்கமே கே.ஜி.எப்., என அழைக்கப்படுகிறது.
நந்திமலை என்ற நந்தி துருகம், 1,000 ஆண்டுகளுக்கு முன்பு பலம் பொருந்திய கோட்டையாக திகழ்ந்தது. தங்கவயல் பகுதியில் கிடைத்த தங்கத்தின் பொருட்டு கோலாரும், நந்தி துருகமும் சிறப்படைந்தது.
தங்கம், வெள்ளி மற்றும் நவரத்தினங்களை பாதுகாக்கும் பொக்கிஷமாக நந்தி மலைக்கோட்டை பயன்படுத்தப்பட்டிருக்க கூடும் என்று வரலாற்று ஆசிரியரான 'குட்வில் பாதிரியார்' தன் ஆராய்ச்சி நுாலில் தெரிவித்திருக்கிறார்.
கோலார் பட்டினம் சோழ மன்னர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்த காலத்தில், தமது குல தெய்வங்களுக்கு கோவில்கள் எழுப்பினர் என்றும்; சிறப்புடன் இருக்கும் செங்கற்களால் கட்டப்பட்டிருந்த பிடாரியார் கோவில். ராஜேந்திர சோழன் காலத்தில் கருங்கல் கட்டடமாக புதுப்பிக்கப்பட்டது.
திருமாலின் அவதாரங்களில் ஒன்றாகிய வராகனை, தம் அரசு முத்திரையிலும், தங்க நாணயத்திலும், பதித்ததன் காரணமாக தங்க நாணயம் 'வராகன்' எனப்பட்டதுடன், இந்த நுாற்றாண்டின் ஆரம்பம் வரையில் வழக்கத்தில் இருந்தது.
'முள்ளு பாகலுார்' அல்லது 'முன் வாசல்' என பெயர் அமைந்த முல்பாகலுக்கு கிழக்கே உள்ள நங்கிலி கிராமத்தில் முகாமிட்டிருந்த சாளுக்கிய மன்னன், 'விக்காளன்' என்பவரை கி.பி., 1070 ல் இரண்டாம் ராஜேந்திர சோழனை போரில் வென்று, துங்கபத்ரா ஆறு வரையில், துரத்தினார் என்றும், விக்காளன் புறங்காட்டி ஓடிய திசை எல்லாம் போர் யானைகள் மாண்டு கிடந்தன என்றும் கல் சாசனங்கள் கூறுகின்றன என்று குட்வில் பாதிரியார் குறிப்பிடுகிறார்.
நங்கிலிக்கு கிழக்கே நாயக்கனேரி கணவாய் பாதைகள் அமைந்திருந்ததன் காரணமாக ராணுவ முக்கியத்துவம் பெற்றிருந்தது.
ஹொய்சாலர்கள் காலம்
சமணத்தை தழுவிய அந்த ஹொய்சாலா மன்னர் பிட்டி தேவன், ஸ்ரீ ராமானுஜரால் வைணவத்தை சார்ந்து விஷ்ணுவர்த்தனன் என பெயர் கொண்டு பிரதேசத்தை ஆட்சி புரிந்தார்.
அவருக்கு பின்னர் ஆண்ட ெஹாய்சாலா நரசிம்மனின் புகழ் மிக்க தளபதி சொக்கிமய்யா கி.பி., 1115 ல் நங்கிலியில் தங்கி எல்லை பாதுகாப்பை கண்காணித்து வந்த காலத்தில், நந்தி துர்கா குன்றுகளில் இருந்து வரும் பாலாற்று நீரை தேக்கிய 'விஜயா தித்தியமங்கலம்' ஏரி பெருமழையால் உடைந்த போது, அதை பழுது பார்த்து பூரணமாக கட்டி முடித்தார்.
எட்டு நுாற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சரித்திர புகழ் வாய்ந்த விஜயாதித்ய மங்கல ஏரி தான் தங்கவயல் மக்களின் தாகத்தை தணிக்கும் பேத்தமங்களா ஏரி.
முல்பாகல்
விஜய நகர பேரரசின் கீழ் 1336- - 1565 காலத்தில் ஆட்சி இருந்தது. அப்போது முல்பாகல் குன்றின் மீது புராதன கோட்டை மதில்கள் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனை இப்போதும் கூட காணலாம்.
மொகலாய மன்னர் அக்பரின் நிதி அமைச்சராக இருந்த ராஜா தோடர்மால், முல்பாகலில் அனுமாருக்கு பூஜைகள் செய்து வந்ததால் இக்கோவிலை சுற்றியுள்ள இடங்களை கோவிலுக்கு மானியமாக வழங்கியதாக தல வரலாறு கூறுகிறது.
குருடு மலை
ஜெயம் கொண்ட சோழர் ஆட்சியில் முல்பாகலில் இருந்து 6 கி.மீ., தொலைவில் சோமசுந்தரேஸ்வரருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் அருகே, ஒரே கல்லில் 10 அடி உயரத்தில் கணபதி சிலையும் அமைத்துள்ளனர்.
இது, மூலஸ்தான வாசலை விட உயரமாக உள்ளது. எனவே விக்ரஹம் உருவாகிய பின்னரே, கோவிலை கட்டப்பட்டிருக்கலாமென கூறுகின்றனர். முல்பாகலுக்கு கிழக்கே, விருபாக் ஷிபுரம் உள்ளது.
இங்கு சிற்பங்கள் நிறைந்த கோவில்கள் உள்ளன நரசிம்ம தீர்த்தம் எனும் குளமும் குகைக் கோவிலும் உள்ளன. இதுவும் கோலார் மாவட்டத்தின் புண்ணிய தலமாக விளங்குகிறது.
ஆவணி குன்றின் அடிவாரத்தில் சோழ மன்னர்களால் சிவபெருமானுக்கும், சக்தி அம்மனுக்கும் கோவில்கள் அமைந்துள்ளன. அதனைச் சுற்றி பழந்தமிழில் சாசனங்கள் செதுக்கப் பட்டுள்ளன. குன்றின் உச்சியில் ராமாயண இதிகாச தலைவி சீதா தேவியை போற்றும் வகையில் கோவிலும், அவரது பிள்ளைகள் லவனும் - குசனும் பிறந்த இடங்களாக அமைந்த குகை கோவில்களும் உள்ளன. இங்கு குழந்தை செல்வம் பேறு இல்லாத சுமங்கலிகள் பிரார்த்தனை செய்வர். மலை மீதிருக்கும் ஊற்று குளங்களில் குளித்து, ஈர ஆடைகளுடன் கோவிலை அடைவர். எதிரே மலைப்பாறை திறந்தவெளியில் ஆராதனை பொருட்களை கையில் ஏந்தியவாறு விழுந்து சேவிப்பர். கோடை வெயில் வெப்பத்தால் சில நொடிகளில் துயில் கொள்ள கனவுகள் தோன்றி, தேவி அருள் கிடைத்து, குழந்தை செல்வம் வாய்ப்பாகும் என கருதப்படுகிறது.
மகப்பேறு பெற பிரார்த்தனைக்கு புண்ணிய தலமாக இன்னமும் மதிக்கப்படுகிறது. இத்தகைய பிரார்த்தனையினால் பிறக்கும் குழந்தைகளுக்கு சீதையின் பெயர் வைப்பது மரபு.
இங்குள்ள ராமலிங்கேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது.
தங்கம் துாங்கும் நகரான தங்கவயலிலும் கூட நான்கு திசைகளிலும் ராஜராஜசோழன் ஆட்சி நடந்ததன் அடையாளமாக சோமேஸ்வரர் கோவில், பழைய மாரிகுப்பத்தில் சோமேஸ்வரர் கோவில், கேசம் பள்ளியில் ஈஸ்வரன் கோவில், தங்கவயல் பெமல் பின்புறம் கங்காதீஸ்வரர் கோவில்கள் உள்ளன.
இவைகளை தமிழ் கல்வெட்டுகள் மூலம் அறியலாம்
- நமது நிருபர் -.