கேரளாவில் 3வது முறையும் மா.கம்யூ., ஆட்சிக்கு வரும்!
கேரளாவில் 3வது முறையும் மா.கம்யூ., ஆட்சிக்கு வரும்!
ADDED : ஜன 21, 2025 11:38 PM

பாலக்காடு, : கேரளாவில் மூன்றாவது முறையும் மா.கம்யூ., தலைமையிலான இடது ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும், என, கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தன் தெரிவித்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் சித்தூரில், மா.கம்யூ., கட்சியின் மாவட்ட மாநாடு நேற்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. மாநாட்டை முன்னிட்டு, நேற்று நடந்த பிரதிநிதி கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் சுரேஷ் பாபு தலைமை வகித்தார். கட்சியின் மத்திய மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர்களான பாலன், ஸ்ரீமதி, ஷைலஜா, இளமரம் கரீம், பிஜு ஆகியோர் பேசினர்.
கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தன் மாநாட்டை துவக்கி வைத்து பேசியதாவது:
2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலில், மூன்றாவது முறையும் மா.கம்யூ., கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். அதனால் காங்., கட்சியினர் முதல்வர் பதவிக்காக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள். கேரளாவில், தற்போதைய சூழ்நிலை மா.கம்யூனிஸ்ட் கட்சிக்கு சாதகமாக உள்ளது. காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி வகுப்புவாத அமைப்புடன் கூட்டு சேர்ந்து செயல்படுகிறது.
இவ்வாறு, பேசினார்.
மாநாட்டை முன்னிட்டு, நாளை (23ம் தேதி) நடக்கும் பொதுக்கூட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைக்கிறார்.