முன்னாள் முதல்வர் மீது புகார் கூறியவர் குத்தி கொலை
முன்னாள் முதல்வர் மீது புகார் கூறியவர் குத்தி கொலை
ADDED : பிப் 21, 2025 01:05 AM
ஹைதராபாத்தெலுங்கானா முன்னாள் முதல்வர், கே.சி.ஆர்., எனும் கே.சந்திரசேகர ராவ் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய நபர், மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.
தெலுங்கானா மாநிலத்தின் பிரமாண்ட மான நீர் பாசன திட்டமாக, காலேஸ்வரம் நீரேற்று திட்டம் உள்ளது. அதன் ஒரு அங்கமான, மெடிகட்டா தடுப்பணையில், கடந்த 2023ல் சில பாதிப்புகள் ஏற்பட்டன.
உடனே, அந்த நீரேற்று திட்டத்தில் அப்போதைய முதல்வர் சந்திரசேகர ராவும், அவரின் உறவினர் ஹரிஷ் ராவும் ஊழல் செய்து விட்டதாக என்.ராஜலிங்கமூர்த்தி, 50, என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கிலிருந்து இருவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ராஜலிங்கமூர்த்தி நேற்று முன்தினம் மர்மமான முறையில் இருவரால், கத்தி யால் குத்தப்பட்டு இறந்தார்.
அவர், பூபால்பள்ளி என்ற இடத்தில், இரவு 7:30 மணிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்த போது, வழிமறித்த இருவர் அவரை கத்தியால் குத்தி கொன்றனர்.
அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், காலேஸ்வரம் நீரேற்று திட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ள போலீசார், அவரை கொன்றவர்கள் யார்? என விசாரிக்கின்றனர்.

