sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் தீர்ந்தது! ம.ஜ.த.,வின் மூன்று தொகுதிகள் அறிவிப்பு

/

தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் தீர்ந்தது! ம.ஜ.த.,வின் மூன்று தொகுதிகள் அறிவிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் தீர்ந்தது! ம.ஜ.த.,வின் மூன்று தொகுதிகள் அறிவிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் தீர்ந்தது! ம.ஜ.த.,வின் மூன்று தொகுதிகள் அறிவிப்பு


ADDED : மார் 23, 2024 11:07 PM

Google News

ADDED : மார் 23, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கடந்த சில வாரங்களாக தேசிய ஜனநாயக கூட்டணியில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்தது. முன்னாள் பிரதமர் தேவகவுடா நேரடியாக தலையிட்டதால், கர்நாடகாவில் மாண்டியா, ஹாசன், கோலார் ஆகிய தொகுதிகளை ம.ஜ.த.,வுக்கு பா.ஜ., விட்டுக் கொடுத்துள்ளது. இதனால் மாண்டியா சுயேச்சை எம்.பி., சுமலதா அதிருப்தி அடைந்துள்ளார்.

கர்நாடகாவில் தன் இருப்பை தக்கவைத்துக் கொள்ள ம.ஜ.த.,வும்; சட்டசபை தேர்தலில் வாங்கிய 'அடி'யை லோக்சபா தேர்தலில் வாங்கக்கூடாது என்பதால் பா.ஜ.,வும் கூட்டணி அமைத்துள்ளன.

லோக்சபா தேர்தலில் ம.ஜ.த.,வுக்கு ஐந்து தொகுதிகள் கிடைக்கும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டு வந்தது. அதன் பின், மாண்டியா, ஹாசன், கோலார் ஆகிய தொகுதிகளை பா.ஜ.,விடம் ம.ஜ.த., தலைவர்கள் கேட்டு வந்தனர்.

இதை விட்டுக் கொடுக்க உள்ளூர் பா.ஜ., தலைவர்கள் மறுத்து வந்தனர். இதனால், தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்தது.

அதிருப்தி

இதன் காரணமாக சமீபத்தில் ஷிவமொகாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பா.ஜ., பொதுக்கூட்டத்திற்கு கூட ம.ஜ.த., தலைவர்களுக்கு மரியாதைக்கு கூட அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் ம.ஜ.த., வட்டாரம் அதிருப்தி அடைந்தது.

மாநிலத் தலைவர் வெளிப்படையாக அதிருப்தியை வெளிப்படுத்தினார். அத்துடன் கண்டனமும் தெரிவித்தது, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்குப் பின், குமாரசாமிக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக மாநிலத் தலைவர் குமாரசாமி சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். இந்த இடைவெளியில் காங்கிரசார் தங்கள் 'வேலை'யை துவங்கிவிட்டனர். ம.ஜ.த., - எம்.எல்.சி., மரிதிப்பே கவுடாவை தங்கள் கட்சிக்கு இழுத்துக் கொண்டனர்.

டில்லி பயணம்

கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தை போக்குவதற்காக, கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, நேற்று காலை திடீரென புதுடில்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு பா.ஜ., மேலிட தலைவரான அமித் ஷா உட்பட தலைவர்களை சந்தித்து, தன் அதிருப்தியை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, பெங்களூரில் பா.ஜ., தேர்தல் நிர்வாக குழுக் கூட்டம் நடந்தது. அப்போது, மாநில தேர்தல் பொறுப்பாளர் ராதா மோகன் தாஸ் அகர்வால், “தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.ஜ.த.,வுக்கு மாண்டியா, ஹாசன், கோலார் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன,” என அறிவித்தார்.

இதனால், மாநிலத்தில் கூட்டணியில் ஏற்பட்டிருந்த குழப்பம் முடிவுக்கு வந்தது.

கட்சிக்காக தியாகம்

தற்போது கோலார் பா.ஜ., - எம்.பி.,யாக உள்ள முனிசாமி, மீண்டும் களமிறங்க வேண்டும் என்பதற்காக, புதுடில்லியில் மேலிட தலைவர்களை சந்தித்துப் பேசி வந்தார். அதற்குள், கோலார் ம.ஜ.த.,வுக்கு கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

பா.ஜ., ஏற்கனவே 20 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. கூட்டணி கட்சியான ம.ஜ.த.,வுக்கு மூன்று தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது.

மீதமுள்ள பெலகாவி, ராய்ச்சூர், உத்தர கன்னடா, சித்ரதுர்கா, சிக்கபல்லாபூர் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

சுமலா போட்டி?

மாண்டியா தொகுதியை தனக்கு ஒதுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பா.ஜ., தலைவர்களை சந்தித்து, சுயேச்சை எம்.பி., சுமலதா கோரிக்கை விடுத்து வந்தார்.

ஆனால், மாண்டியாவை ம.ஜ.த.,வுக்கு பா.ஜ., விட்டுக் கொடுத்ததால், சுமலதா அதிருப்தி அடைந்துள்ளார். இதுதொடர்பாக தன் ஆதரவாளர்களிடம் வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

அடுத்தகட்ட முடிவு குறித்து தன் ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டு உள்ளார்.

மீண்டும் சுயேச்சையாக போட்டியிடலாமா அல்லது பா.ஜ., இன்னும் அறிவிக்காத ஐந்து தொகுதிகளில் ஒரு தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிடலாமா என்பது குறித்து அவர் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளார்.

எந்த தியாகத்துக்கும் தயார்!

கோலார் தொகுதி ம.ஜ.த.,வுக்கு ஒதுக்கப்பட்டது குறித்து புதுடில்லியில் எம்.பி.,முனிசாமி கூறியதாவது:தேசிய ஜனநாயக கூட்டணியில் மூன்று தொகுதிகள் ம.ஜ.த.,வுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற செய்வது தான் எங்களின் லட்சியம்.நான், கோலார் தொகுதி எம்.பி.,யாக இருந்தவன். என் பணிகள் பற்றி கட்சியினருக்கும், தொகுதி மக்களுக்கும் நன்கு தெரியும். எனவே எனக்கு சீட் கிடைக்கும் எனநினைத்திருந்தேன்.கூட்டணிக் கட்சியான ம.ஜ.த., வுக்கு கோலார் தொகுதியை விட்டுக் கொடுக்க மேலிடம் முடிவு செய்ததால், எனக்கு எந்த மனக்கசப்பும் இல்லை. கட்சியை மீறி எதையும் செய்ய மாட்டேன். கட்சியில் நான் சிறியவன். கட்சி கொள்கையின் சிப்பாயி.முந்தைய லோக்சபா தேர்தலில் உழைத்ததை விட தற்போதைய தேர்தலில் அதிகமாக உழைத்து, கோலார் தொகுதியில் காங்கிரசை வீழ்த்த பாடுபடுவேன்.உலகில் 'நம்பர் ஒன்' சிறந்த நிர்வாகி பிரதமர் நரேந்திர மோடி. அவர் மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக வேண்டும். அதற்காக எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறேன்.யோகி ஆதித்யநாத் பதவிக்கு வர, தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜா மோகன்தாஸ் விட்டு தரவில்லையா; கட்சிக்காக அவர் தியாகம் செய்யவில்லையா? அவரைப்போல் கட்சிக்காக பலர் தியாகம் செய்துள்ள, பல சம்பவங்கள் எனக்கு வழிகாட்டியாக உள்ளன. எனவே, நான் வேறு கட்சிக்கு தாவுவதோ, சுயேச்சையாக போட்டியிடவோ போவதில்லை.என் நோக்கமெல்லாம் மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும். ஊழல் காங்கிரசை, ராம விரோத, தேச விரோத காங்கிரசை தோற்கடிக்க வேண்டும்.ஒரு சமுதாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதே காங்கிரசின் போக்கு. அதனால், அத்தகைய கட்சியை தோற்கடிக்க பா.ஜ.,வின் சிப்பாயாக செயல்படுவேன். மாற்று சிந்தனை கிடையாது.முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்துப் பேசியது உண்மை தான். அப்போது, கோலாரில் உள்ள நிலவரங்கள் பற்றி பேசினேன். கூட்டணி ஒப்பந்தத்தில் கோலார் ம.ஜ.த.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.எனவே, காங்கிரசை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணிவெற்றிக்காக பாடுபடுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us