பா.ஜ.,வை பார்த்து காங்கிரஸ் குடும்பத்துக்கு பொறாமை!: 10 ஆண்டு ஆட்சியில் இல்லாததால் வயிற்றெரிச்சல்
பா.ஜ.,வை பார்த்து காங்கிரஸ் குடும்பத்துக்கு பொறாமை!: 10 ஆண்டு ஆட்சியில் இல்லாததால் வயிற்றெரிச்சல்
ADDED : ஏப் 15, 2024 12:16 AM

ஹோஷங்காபாத்: ''கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால், பா.ஜ.,வை பார்த்து காங்கிரஸ் குடும்பம் பொறாமைப்படுகிறது. எனவே தான், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடே தீப்பிடித்து எரியும் என, கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகின்றனர். இதையெல்லாம் மக்கள் நம்ப தயாராக இல்லை,'' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தின் ஹோஷங்காபாத் லோக்சபா தொகுதியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டில் நிலவும் வறுமையை ஒரு வினாடியில் போக்கிவிடுவேன் என, காங்கிரஸ் கட்சியின் இளவரசர் கூறுகிறார். இதை கேட்டால் சிரிப்பு தான் வருகிறது. இந்த அரசக் குடும்பத்து மேஜிக் நிபுணர் இத்தனை ஆண்டுகளாக எங்கிருந்தார்?
'வறுமையை ஒழிப்பேன்' என, இவரது பாட்டி 50 ஆண்டுகளுக்கு முன் கூறினார். இவர்களை எல்லாம் மக்கள் நம்ப தயாராக இல்லை.
கடந்த 2014க்கு முன் இந்த நாட்டை, 'ரிமோட் கன்ட்ரோல்' வாயிலாக ஆண்ட இவர்கள், தற்போது சிரிப்பை ஏற்படுத்தும் புதிய வாக்கியங்களை உதிர்த்து வருகின்றனர்.
மூன்றாவது முறை
ஒரு ஏழை குடும்பத்தின் மகன் பிரதமரான உடனேயே, அரசியலமைப்பு சட்டமும், ஜனநாயகமும் ஆபத்தில் இருப்பதாக வதந்திகளை பரப்புகின்றனர். அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பின் காரணமாகவே இந்த உயரத்தை என்னால் தொட முடிந்தது.
அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி இழிவுபடுத்தி வந்துள்ளது. நாங்கள் அவரை கவுரவித்துள்ளோம். பழங்குடியினரின் பங்களிப்பை காங்., என்றைக்குமே அங்கீகரித்தது இல்லை.
அம்பேத்கர் அளித்த அரசியலமைப்பின் காரணமாக தான், பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண், நாட்டின் ஜனாதிபதியாக இன்று உயர்ந்துள்ளார்.
ஆட்சியில் இருந்தபோது அவசர நிலையை பிரகடனம் செய்த காங்கிரஸ், பல மாநிலங்களில் ஆட்சியை கலைத்துள்ளது.
அப்படிப்பட்ட கட்சி பா.ஜ., மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், நாடே தீப்பிடித்து எரியும் என மிரட்டல் விடுகிறது.
இது ஒன்றும் புதிதல்ல. ராமர் கோவில் கட்டப்பட்டால், ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டால், இந்த நாடே தீப்பிடித்து எரியும் என ஏற்கனவே இவர்கள் மிரட்டியுள்ளனர்.
அவர்களுக்கு பொறாமை. அவர்களின் மனது தான் தீப்பிடித்து எரிகிறது.
வயிற்றெரிச்சல்
மோடி மீது மட்டுமின்றி, நாட்டின் 140 கோடி மக்களின் மீதும் அவர்களுக்கு பொறாமை. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால், வயிற்றெரிச்சலில் புலம்புகின்றனர். நம் நாடு எந்த திசையை நோக்கி நகர வேண்டும் என்பதில், 'இண்டியா' கூட்டணியினரால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

