குற்றவாளிகளை நாடு கடத்துவதில் நீடிக்கும் சவால்!: 178 பேரில் 23 பேர் மட்டுமே வந்துள்ளனர்
குற்றவாளிகளை நாடு கடத்துவதில் நீடிக்கும் சவால்!: 178 பேரில் 23 பேர் மட்டுமே வந்துள்ளனர்
ADDED : ஏப் 20, 2025 12:15 AM

மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், வெளிநாடுகளுக்கு தப்பியோடிய, 178 பேரில், 23 பேர் மட்டுமே இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. நாடு கடத்துவது மிக எளிதான காரியம் அல்ல எனவும் அது தொடர்பான நடைமுறைகளுக்கு மிக நீண்ட காலமாகும் எனவும் தெரியவந்துள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையில் கடந்த, 2008 நவ., 26-ல் கடல் வழியாக நுழைந்து, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
தாஜ் ஹோட்டலில் பதுங்கிய பயங்கரவாதிகளை நம் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். உயிருடன் பிடிபட்ட கசாப், துாக்கிலிடப்பட்டார்.
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா, அமெரிக்காவுக்கு தப்பியோடிய நிலையில், அங்கு கைதானார். தாக்குதல் நடந்து, 17 ஆண்டுகள் கழித்து, தற்போது இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, விசாரணை நடக்கிறது.
அமெரிக்காவில் இருந்து ராணாவை அழைத்து வந்தது, பல்வேறு திசைகளில் இருந்தும் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் இந்தியாவின் பாதுகாப்பு அந்தஸ்தை ஒரு படி உயர்த்தி இருக்கிறது.
கோரிக்கை
கொலை, நம் நாட்டின் மீது போர் தொடுக்கும் முயற்சி என பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரிக்கப்படும் ராணா, குற்றம் நிரூபிக்கப்பட்டால் துாக்கில் இடப்படுவார். இந்த நாடு கடத்துதல் முயற்சி ராணாவுடன் முழுமையடையவில்லை. இந்தியாவில் இருந்து தப்பியோடிய குற்றவாளிகளில் அவரும் ஒருவர். அவ்வளவு தான்.
அரசு தகவலின்படி, கடந்த, 5 ஆண்டுகளில் மட்டும் சட்ட அமலாக்க நிறுவனங்களால் பல்வேறு நாடுகளுக்கு, 178 கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
ஆனால், 2019, ஜனவரி முதல் தற்போது வரை, 23 பேர் மட்டுமே இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.
இன்னும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் லக்பிர் சிங் லந்தா, அர்ஷ்தீப் சிங் கில், விஜய் மல்லையா, முன்னாள் ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி, வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி, சதிந்தர்ஜித் சிங், தாவூத் இப்ராஹிம் என தேடப்படும் குற்றவாளிகள் ஏராளமானோர் வெளிநாடுகளில் உள்ளனர்.
குற்றவாளிகளை நாடு கடத்துவதற்காக, 48 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், 12 நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சு நடக்கிறது.
ஆனால், இந்த விஷயத்தில் ஒப்பந்தம் மட்டுமே போதுமானது அல்ல. வெளிநாட்டில் குற்றவாளி சிக்கினால்கூட, அவரை இந்தியாவுக்கு உடனே அழைத்து வர முடியாது. அதற்கு பல மாதங்கள் முதல் பல ஆண்டுகள் வரையாகும்.
மனித உரிமை
முதலில் குற்றவாளி சிக்கிய நாட்டுக்கு, நம் வெளியுறவு துறையில் இருந்து முறைப்படி கோரிக்கை அனுப்பப்படும். அதற்கு, அந்த நாட்டுடன் நாம் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். நம் கோரிக்கையை பெற்றதும், அந்நாட்டின் நீதிபதி வாயிலாக, கைதான குற்றவாளிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.
மூன்றாவது கட்டமாக, அந்த உத்தரவை கைதானவர் எதிர்த்தால், சம்பந்தப்பட்ட நாட்டின் நீதிமன்றங்கள் விசாரிக்கும். ராணா விஷயத்தில் கூட, கடைசி கட்டமாக நீதிமன்றத்தை நாடியது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றங்களிலும் பல சவால்கள் ஏற்படும். அந்த நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்த விதிகளுக்கு முரணாக இருந்தாலோ, கைதானவரின் விளக்கம் ஏற்புடையதாக இருந்தாலோ நாடு கடத்தல் கோரிக்கை நிராகரிக்கப்படும்.
அரசியல் கைதிகளாக இருந்தால், நிச்சயமாக நாடு கடத்தப்பட மாட்டார்கள். சில நாடுகள் குற்றவாளிகளின் மனித உரிமை குறித்து கவலைப்பட்டு, அதன் அடிப்படையில் தான் முடிவு எடுக்கும்.
அப்படித்தான், டில்லி திஹார் சிறை மோசமாக இருப்பதாக சஞ்சீவ் குமார் சாவ்லா கூறியதால், 2017ல் பிரிட்டன் நீதிமன்றம், அவரை நாடு கடத்த மறுத்தது.
இதே காரணத்துக்காக புருலியா ஆயுத வழக்கில் தேடப்படும் கிம் டேவியை நெதர்லாந்து அனுப்ப மறுத்தது.
மொழிபெயர்ப்பு
இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் மோசடி செய்து தப்பிய விஜய் மல்லையா, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் மனிதநேயமற்ற முறையில் நடத்துவர் என வாதிட்டுக் கொண்டு இருக்கிறார்.
கைதான குற்றவாளி மீதான குற்றச்சாட்டுகளின் மொழிபெயர்ப்பு சரி இல்லை; அவருக்கு சரியான மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை என்பது போன்ற காரணங்களால் கூட, நாடு கடத்தலுக்கு தடை ஏற்பட்டிருக்கிறது.
இதுபோன்ற ஏராளமான வித விதமான தடைகளை எல்லாம் கடந்து, அந்நாட்டு நீதிமன்றத்தால் நாடு கடத்தல் உத்தரவு உறுதி செய்யப்பட்ட பின், அந்த தகவல் இந்தியாவுக்கு தெரிவிக்கப்படும். அதன் பிறகே, அந்த குற்றவாளி, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்.
- நமது சிறப்பு நிருபர் -