இல்லாத குழந்தை கடத்தல் போலீசில் தம்பதி பொய் புகார்
இல்லாத குழந்தை கடத்தல் போலீசில் தம்பதி பொய் புகார்
ADDED : ஜன 12, 2024 01:24 AM
மாண்டியா, கர்நாடக மாநிலம், மைசூரு, டி.நரசிபுராவின், வட்டரகொப்பலு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார், 35. இவரது மனைவி சவிதா, 30. இவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டு களாகியும் குழந்தை பிறக்கவில்லை. உறவினர்கள் கேலி பேச்சுகளுக்கு பயந்து, ராம்நகர், சென்னபட்டணாவுக்கு குடி பெயர்ந்தனர்.
மீண்டும் சொந்த கிராமத்துக்கு திரும்ப விரும்பிய தம்பதி, தங்களுக்கு குழந்தை இருப்பதாக உறவினர்களிடம் கூற முடிவு செய்தனர். மூன்று நாட்களுக்கு முன், சென்னபட்டணாவில் இருந்து மளவள்ளிக்கு வந்தனர்.
அப்போது, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் இருந்து, தங்கள் குழந்தை கடத்தப்பட்டதாக, சவிதா கதறி அழுது நாடகமாடினார். கணவரும் இதற்கு உடந்தையாக இருந்தார்.
அதன்பின் மளவள்ளி போலீஸ் நிலையத்துக்கு சென்ற தம்பதி, ஒரு குழந்தையின் படத்தை கொடுத்து, புகார் அளித்தனர். அப்போது சவிதா மயங்கி விழுந்ததால், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
குழந்தையை கண்டுபிடிக்க, போலீசார் விசாரணையை துவக்கினர். இதில், போட்டோவில் உள்ள குழந்தை, சென்னபட்டணாவில் உள்ள கிராமம் ஒன்றில் இருப்பது தெரிந்தது. அங்கு சென்று விசாரித்த போது, அது சவிதாவின் உறவினர் குழந்தை என்பது தெரிந்தது.
தனக்கு குழந்தை இல்லை என்பது உறவினர்களுக்கு தெரியக்கூடாது என்பதால், சவிதா குழந்தை கடத்தல் நாடகமாடியதும் தெரியவந்தது.