மது அருந்தியதை கண்டறிவதற்கான 'பிரீத் அனலைசர்' சோதனை செல்லாது: கோர்ட்
மது அருந்தியதை கண்டறிவதற்கான 'பிரீத் அனலைசர்' சோதனை செல்லாது: கோர்ட்
ADDED : பிப் 21, 2025 12:35 AM

பாட்னா :'ஒருவர் மதுஅருந்தியதை கண்டறிய, 'பிரீத் - அனலைசர்' சோதனை மட்டும் போதுமானது கிடையாது' என, பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்குப்பதிவு
பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
அங்கு, மது விலக்கு அமலில் உள்ளது. சாலைகளில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோரை பிடிக்க, 'பிரீத் அனலைசர்' எனப்படும் சுவாச சோதனை கருவியை போலீசார் பயன்படுத்துகின்றனர்.
கடந்த ஆண்டு மே 2-ல், நரேந்திர குமார் ராம் என்பவரிடம் இதுபோல சோதனை நடத்தி, அவர் மது அருந்தியதாக பீஹார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதை எதிர்த்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், “கடந்தாண்டு ஏப்., 16ல் வயிற்று வலிக்காக ஹோமியோபதி மருந்தை எடுத்துக் கொண்டேன். ஆல்ஹகால் அடிப்படையிலான மருந்து என்பதால் என் சுவாசத்தில் மது வாடை வந்திருக்கலாம். அதை வைத்து, நான் மது அருந்தி யதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்,” என குறிப்பிட்டார்.
சுவாச சோதனை
மனுவை விசாரித்த பாட்னா உயர் நீதிமன்ற அமர்வு கூறியதாவது:
ஒருவர் மது அருந்தினார் என்பதை நிரூபிக்க, 'பிரீத் அனலைசர்' சோதனை அறிக்கை மட்டுமே போதுமானது கிடையாது. அதை உறுதியான ஆதார மாக எடுத்துக்கொள்ள முடியாது.
சுவாசத்தில் மது வாடை, குளறல் பேச்சு, தள்ளாட்டம் போன்றவை மட்டுமே ஒருவர் மது அருந்தியதற்கான ஆதாரங்களாக கருத முடியாது என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பு தாக்கல் செய்த ஆவணங்களில், பிரீத் அனலைசர் வாயிலாக சுவாச சோதனையில் 100 மில்லிக்கு, 41 மி.கி., வீதத்தில் மது இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
அதைத் தவிர, வேறு எந்தவிதமான பரிசோதனை அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.