ரங்க மண்டபத்தில் விரிசல் சரி செய்யும் பணிகள் தீவிரம்
ரங்க மண்டபத்தில் விரிசல் சரி செய்யும் பணிகள் தீவிரம்
ADDED : அக் 27, 2024 11:15 PM

பெங்களூரு: பிரசித்தி பெற்ற லால்பாக் பூங்காவில், பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட ரங்க மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணிகள் நடக்கின்றன.
பெங்களூரின், லால்பாக் பூங்கா உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். தினமும் கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகின்றனர். காலை, மாலை நேரங்களில் பொது மக்கள் நடை பயிற்சிக்கு வருகின்றனர்.
லால்பாக் பூங்காவில் லட்சக்கணக்கான பூக்கள், அபூர்வமான மரங்கள் உள்ளன. இப்பூங்காவில் ரங்க மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இது 1860ல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். இதை, 'பாண்ட் ஸ்டாண்ட்' என, அழைத்தனர். இங்கு வாரம் ஒரு முறை, ஆங்கில இசை, வாத்திய நிகழ்ச்சிகள் நடந்தன. சுற்றுலா பயணியரை ஈர்க்கும் இடங்களில், இதுவும் ஒன்றாகும்.
கடந்த 2000ல், ரங்க மண்டபம் தேக்கு மரத்தால் சீரமைக்கப்பட்டது. இதன் மேற்கூரையும் மர பலகைகளால் அமைக்கப்பட்டது. காற்று, மழையால் மேற்கூரை சேதமடைந்து, விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை பழுது பார்க்கும் பணி நடக்கிறது.
இது குறித்து, தோட்டக்கலை இணை இயக்குனர் ஜெகதீஷ் கூறியதாவது:
ரங்க மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கட்டடம் இடியாமல் இரும்பு ராடுகள் பொருத்தப்படுகின்றன.
இதை பலப்படுத்த எல்லப்பா ரெட்டி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கமிட்டியும் ஆய்வு செய்து, ரங்க மண்டபத்தை அகற்றி, பழமை மாறாமல் கட்டும்படி கூறியுள்ளது.
இதன்படி அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி, புதிதாக ரங்க மண்டபம் கட்டப்படும். 24 ஆண்டுக்கு முன், ரங்க மண்டபம் சீரமைக்கப்பட்டது.
கூரையில் பலகைகள் பொருத்தியதால், மழையில் நனைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் அழகு மற்றும் பாரம்பரியத்துக்கு, பாதிப்பு ஏற்படாமல் கட்டப்படும். இதற்காக வல்லுனர்களின் ஆலோசனை பெறப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.