ADDED : ஜன 26, 2025 01:15 AM
மீரட்: உத்தர பிரதேசத்தில் உறவினர்கள் ஐந்து பேரை கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய கொலைக் குற்றவாளி என்கவுன்டரில் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார்.
உ.பி.,யின் மீரட்டில் உள்ள லிசாரி கேட் பகுதியை சேர்ந்தவர் நயீம். இவர், தன் கூட்டாளியுடன் சேர்ந்து சமீபத்தில் அதே பகுதியில் உள்ள தன் உறவினர் மொய்ன், 52, மொயினின் மனைவி அஷ்மா, 45, மற்றும் அந்த தம்பதியின் மூன்று பெண் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், நயீமை பிடித்துக் கொடுத்தால் 50,000 ரூபாய் சன்மானம் தருவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், மீரட்டின் மதினா காலனி பகுதியில் நயீம் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு நேற்று தகவல் கிடைத்தது.
அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, அங்கு பதுங்கியிருந்த நயீம், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
பதிலுக்கு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் நயீம் காயம் அடைந்தார். போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே நயீம் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், நயீமுக்கு மஹாராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் டில்லியில் நடந்த இரு வேறு கொலைகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மீரட்டில் ஐந்து பேரை கொலை செய்த சம்பவத்துக்கு சொத்து தகராறே காரணம் என போலீசார் தெரிவித்தனர்.

