கடந்த ஆண்டை விட கூட்டம் அதிகரிக்கும் அனைவருக்கும் நல்ல தரிசனம்: ஏ.டி.ஜி.பி.
கடந்த ஆண்டை விட கூட்டம் அதிகரிக்கும் அனைவருக்கும் நல்ல தரிசனம்: ஏ.டி.ஜி.பி.
ADDED : டிச 17, 2025 05:47 AM

சபரிமலை: கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த சீசனில் அதிக பக்தர்கள் வந்தாலும் அனைவருக்கும் நல்ல தரிசனம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சபரிமலை பொறுப்பு ஏ.டி.ஜி.பி.ஸ்ரீஜித் கூறினார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டை விட இந்த சீசனில் கூடுதல் பக்தர்கள் வந்துள்ளனர். சரியாக திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக அனைத்து பக்தர்களுக்கும் நல்ல தரிசனம் கிடைத்தது. கடந்த ஆண்டு இந்த கால அளவில் 21 லட்சம் பக்தர்கள் வந்திருந்தனர். தற்போது இது 25 லட்சமாக உயர்ந்துள்ளது. சீசன் தொடக்கத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் வந்த போதும் அதை நிர்வகிக்க முடிந்தது.
விரிச்சுவல் கியூவில் முன்பதிவு செய்தவர்கள் அந்த நாளிலேயே வருவதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு வராமல் அடுத்த நாள் வரும்போது நெருக்கடிகள் ஏற்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே பக்தர்கள் அந்தந்த நாளிலேயே வரவேண்டும். முன்பதிவு பதிவு செய்த நாள் மற்றும் தரிசன நேரம் தவறிவரும் பக்தர்கள் அதிகாரிகள் அறிவுரையை கேட்டு பொறுமை காக்க வேண்டும்.
இந்த சீசனில் சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் வேலை நாட்களில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மண்டல பூஜை நெருங்கி வரும் நிலையில் அடுத்த வாரத்தில் அதிகமான கூட்டம் வரும் என்பதை கருத்தில் கொண்டு அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

