முல்லை பெரியாறு அணைக்கு ஆபத்து என்பது... கற்பனை கதை! உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்
முல்லை பெரியாறு அணைக்கு ஆபத்து என்பது... கற்பனை கதை! உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்
ADDED : ஜன 29, 2025 02:37 AM

புதுடில்லி 'முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது என்பது கற்பனை கதை. அந்த கற்பனையை எல்லாம் ஏற்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
முல்லை பெரியாறு அணை தொடர்பான பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் நிலையில், 'அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும்.
'பழமையான இந்த அணையின் பாதுகாப்பு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
விசாரணை
இந்த வழக்குகளில் மத்திய அரசையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் எனக் கூறி தொடரப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று, நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கிருஷ்ண மூர்த்தி மற்றும் உமாபதி ஆகியோர், 'முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக தான் உள்ளது என, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பலமுறை உறுதியாக கூறிவிட்டது.
'இந்த விவகாரத்தில் மத்திய அரசும் ஏற்கனவே நிபுணர் குழுவை அமைத்துள்ளது. அது மட்டும் இல்லாமல், முல்லை பெரியாறு தொடர்பான வழக்குகளை, ஏற்கனவே நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்து வரும் நிலையில், அந்த அமர்வுக்கே இந்த வழக்கையும் மாற்ற வேண்டும்' என, வாதங்களை முன்வைத்தனர்.
'இதற்கு பதிலளித்த, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கேரளாவில் பருவ மழை காலம் விரைவில் துவங்க உள்ள சூழலில், அணையின் பாதுகாப்பு குறித்த அச்சம் மக்களிடம் உள்ளது.
'அணைக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், 50 லட்சம் மக்கள் பாதிப்படைவர். எனவே முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து புதிதாக ஆய்வு செய்ய வேண்டும். அதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும்' என, கோரிக்கை வைத்தார்.
நன்றி
அதற்கு பதில் அளித்து நீதிபதிகள் கூறியதாவது:
முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டு 130 ஆண்டுகளுக்கு மேலாகிறது. பல பருவ மழைகளையும், பெருவெள்ளங்களையும் பார்த்து இருக்கிறது.
ஆனால், அணையின் வயதை மட்டுமே காரணமாக கூறி, அணை உடைந்து விடும் என மக்கள் அச்சப்படுவதாக நீங்கள் கூறுவதை ஏற்க முடியாது.
நீங்கள் வெளிப்படுத்தும் இந்த அச்சம் கற்பனை கதைகளை போலத்தான் இருக்கிறது என, நாங்கள் உணர்கிறோம்.
நாங்களும் கேரளாவில் வசித்து இருக்கிறோம். இவ்வளவு வயதிலும் அணை கம்பீரமானதாகவும், நிலையானதாகவும் இருக்கிறது.
இத்தகைய வலுவுடன் இந்த அணையை அமைத்ததற்காக, அணையை கட்டியவர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதன் பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றத்தின் வேறு அமர்வு விசாரித்து வருவதால், இந்த வழக்கையும் அந்த மனுக்களோடு இணைத்து விசாரிக்க பட்டியலிட வேண்டும்' என, பதிவாளருக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

