ADDED : மார் 01, 2024 06:27 AM

பாகல்கோட்: கூலித் தொழில் தம்பதியின் மகள் நீதிபதியாக தேர்வாகி அசத்தி உள்ளார்.
பாகல்கோட்டின் ஹுனகுந்த் தாலுகா கங்குரா கிராமத்தில் வசிப்பவர் துரகப்பா மாதர். இவரது மனைவி யமனவ்வா.
இந்த தம்பதியின் ஐந்தாவது மகள் பாக்யஸ்ரீ, 26. கர்நாடகாவில் சிவில் நீதிமன்றங்களில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்ப, 2023ல் தேர்வு நடந்தது. சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் பாக்யஸ்ரீ தேர்ச்சி பெற்று, நீதிபதி ஆகி உள்ளார்.
இதுகுறித்து பாக்யஸ்ரீ அளித்த பேட்டி:
எங்கள் குடும்பம் பெரியது. எனது பெற்றோருக்கு நான் உட்பட 7 பிள்ளைகள். எனது பெற்றோர் படிக்கவில்லை.
இதனால் கூலி வேலை செய்து, எங்களை படிக்க வைத்தனர். ஆரம்ப கல்வியை கங்குரா கிராமத்திலும், உயர்கல்வியை சித்தரகி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் படித்தேன். கல்லுாரி படிப்பை சங்கமேஸ்வரில் அரசு கல்லுாரியில் படித்தேன்.
சிறுவயதில் இருந்தே ஏதாவது சாதிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், எங்களை படிக்க வைத்தனர். கால்நடை மருத்துவர் ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் எனது தந்தை, நான் சட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று விரும்பினார்.
நான் கல்லுாரியில் படிக்கும்போது, ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நீதிபதி ஒருவர் வந்தார்.
அவரை பார்த்த பின்னர், நீதிபதி ஆக வேண்டும் என்று எனக்கும் ஆசை வந்தது. கல்லுாரி முடித்த பின்னர் சட்டக் கல்லுாரியில் சேர்த்தேன்.
ஹுனகுந்த் நீதிமன்றத்தில் பணியாற்றும், வக்கீல் ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்தேன். ஏழைகள், சட்ட அறிவு இல்லாதவர்கள் நீதிமன்றத்திற்கு வருவர். அவர்களை பார்க்க பாவமாக இருக்கும். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நினைப்பேன்.
கடந்த 2021, 2022ல் நடந்த சிவில் நீதிபதிகள் தேர்வில், எழுத்து தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனால் நேர்காணலில் தோற்றேன்; எங்கு தடுமாறுகிறேன் என்று அறிந்து கொண்டேன்.
தற்போது எழுத்து, நேர்காணலில் வெற்றி பெற்று, நீதிபதியாக தேர்வாகி உள்ளேன். கூலி வேலை செய்தாலும், பெண் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வேண்டுமென, எனது பெற்றோர் விரும்பினர். எனது தந்தையின் கனவு நனவாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

