கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணி 17 மாதங்களாக தொடரும் இழுபறி
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணி 17 மாதங்களாக தொடரும் இழுபறி
ADDED : ஜூலை 23, 2025 12:43 AM
சென்னை,கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் கட்டுமான பணிகள் துவங்கி, 17 மாதங்கள் ஆகியும், இன்னும் பயன்பாட்டிற்கு வராததால், பயணியர் அவதிப்படுகின்றனர்.
புதிதாக கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து, 90 சதவீத அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், இங்கிருந்து தான் இயக்கப்படுகின்றன. ஆனால், மின்சார ரயில் நிலைய இணைப்பு வசதி இல்லை.
வண்டலுார் ரயில் நிலையத்தை அடுத்து, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள், கடந்தாண்டு ஜன., 2ம் தேதி துவங்கப்பட்டன. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து, 500 மீட்டரில் இந்த ரயில் நிலையம் அமைகிறது.
ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டது. திட்டமிட்ட காலம் முடிந்து, பல மாதங்கள் கடந்து விட்டன. இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.
இது குறித்து, பயணியர் கூறியதாவது:
கிளாம்பாக்கத்தில் இருந்து தங்களது இருப்பிடங்களுக்கு செல்ல, சாலை போக்குவரத்து வசதி மட்டுமே உள்ளது. பெரும்பாலானோர், மாநகர பேருந்துகளை நம்பி இருக்கின்றனர்.
பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில், பயணியர் கூட்டம் அதிமாக இருக்கிறது. தாம்பரம், பெருங்களத்துார், வண்டலுார் பகுதிகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் மிகவும் அவசியமானது. இந்த ரயில் நிலைய பணி துவங்கி, 17 மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'வண்டலுார் - கூடுவாஞ்சேரி இடையே, கிளாம்பாக்கத்தில், 20 கோடி ரூபாயில் அமைக்கப்படும் புதிய ரயில் நிலையத்தில், பயணியருக்கான அடிப்படை வசதிகள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
அடுத்த இரண்டு மாதங்களில், பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்' என்றனர்.