பிரச்னைகளை தீர்க்கும்படி மக்கள் குமுறல் காய்ச்சலிலும் குறை கேட்ட துணை முதல்வர்
பிரச்னைகளை தீர்க்கும்படி மக்கள் குமுறல் காய்ச்சலிலும் குறை கேட்ட துணை முதல்வர்
ADDED : ஜன 07, 2024 02:45 AM

பெங்களூரு : குடிநீர், சொத்து வரி, சாலை மேம்பாடு, முதியோர், விதவை ஊக்கத்தொகை, பி.பி.எல்., ரேஷன் அட்டை உட்பட முக்கியமான அடிப்படை பிரச்னைகள் குறித்து, ஏராளமானோர் துணை முதல்வர் சிவகுமாரிடம் புகார் கூறினர். காய்ச்சலிலும் அவர் குறை கேட்டார்.
பெங்களூரின் ஹெப்பால், சிவாஜிநகர், புலிகேசிநகர் சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 'வாசலுக்கு வந்தது அரசு - சேவைக்கு இருக்கட்டும் ஒத்துழைப்பு' என்ற நிகழ்ச்சிக்கு, ஹலசூரு ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
காலை 9:30 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், துணை முதல்வர் சிவகுமாருக்கு, 102 டிகிரி காய்ச்சலால் சிகிச்சை பெற்று கொண்டு வந்ததால், 3 மணி நேரம் தாமதமானது.
ஏராளமான தமிழர்கள்
குடிநீர், சொத்து வரி, சாலை மேம்பாடு, முதியோர், விதவை ஊக்கத்தொகை, பி.பி.எல்., ரேஷன் அட்டை உட்பட முக்கியமான அடிப்படை பிரச்னைகள் குறித்து, ஆயிரத்துக்கும் அதிகமானோர் புகார் மனுக்களை பதிவு செய்தனர்.
தமிழர்கள் அதிகம் மிகுந்த தொகுதிகள் என்பதால், ஏராளமான தமிழர்கள் வந்திருந்ததை காண முடிந்தது.
நிகழ்ச்சியை துவக்கிவைத்து சிவகுமார் பேசியதாவது:
வந்துள்ள புகார்களில், பலர் குடியிருப்பு பகுதிகளில் வணிக கட்டடங்களை கட்டியுள்ளனர். இதற்கு வரியும், அபராதமும் அதிகரித்து விட்டதால் தங்களுக்கு அவகாசம் வேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க கூடுதல் அவகாசம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எளிமையான முறையை நடைமுறைப்படுத்த தேவையான சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.
பொதுமக்களும் தங்கள் சொத்துக்கு ஏற்ப வரி செலுத்தி ஒத்துழைக்க வேண்டும். அப்போது அரசும், மக்களுக்கு உதவலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நகர வளர்ச்சி துறை அமைச்சர் பைரதி சுரேஷ், சிவாஜிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத், புலிகேசிநகர் எம்.எல்.ஏ., சீனிவாஸ் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கல்வி உதவி
பவ்யா என்ற பெண், “என் மகன் சிவாஜிநகர் தனியார் பள்ளியில் படிக்கின்றார். கல்விக் கட்டணம் செலுத்த வசதி இல்லை,” என்ற போது, “சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்கிறேன். மகனை நன்றாக படிக்க வையுங்கள்,” என, சிவகுமார் தைரியமூட்டினார்.
மதிய உணவாக, பாதுர்ஷா, புலாவ், தயிர் சாதம், போண்டா வழங்கப்பட்டன.