ADDED : அக் 02, 2024 01:21 AM
லக்னோ,
உத்தர பிரதேசத்தில், 'ஆன்லைன்' வாயிலாக, 'ஐபோன் ஆர்டர்' செய்த நபர், அதை பெற்றுக்கொள்ள பணம் இல்லாததால், 'டெலிவரி' செய்ய வந்த இளைஞரை கொன்று ஆற்றில் வீசிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
உத்தர பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்தவர் கஜனன்.
இவர், 'பிளிப்கார்ட் ஆன்லைன்' விற்பனை தளத்தில், 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'ஐபோன் 15 புரோ மேக்ஸ் மொபைல்' போன் ஆர்டர் செய்தார்.
'கேஷ் ஆன் டெலிவரி' எனப்படும், பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளும் முறையில் ஆர்டர் செய்தார்.
அவரது ஆர்டர் ஏற்கப்பட்டு, பரத் சாஹு, 30, என்ற டெலிவரி ஊழியர் கடந்த மாதம் 23ம் தேதி போனை தருவதற்கு சென்றார்.
அதன்பின், பரத் சாஹு வீடு திரும்பவில்லை. இரண்டு நாட்களாக தேடிய பெற்றோர், பின்போலீசில் புகாரளித்தனர்.
போலீசார், பரத் சாஹு பயன்படுத்திய மொபைல் போன் அழைப்பு விபரங்களை ஆய்வு செய்தனர்.
அதில் அவர் கடைசியாக, ஐபோனை டெலிவரி செய்ய கஜனன் என்பவரிடம் பேசிவிட்டு, அவரது வீட்டுக்குச் சென்றது தெரிந்தது.
போலீசார் கஜனனை பிடித்து விசாரித்ததில், அவர் தன் நண்பர் ஆகாஷ் உடன் இணைந்து டெலிவரி ஊழியர் பரத் சாஹுவை கொன்று விட்டு ஐபோனை அபகரித்ததை ஒப்புக்கொண்டார்.
பின், உடலை அருகில் உள்ள ஆற்றில் வீசியதாக கூறினார்.
இது குறித்து மாநில பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உடலை தேடி வருகின்றனர்.
