பிரசவித்த பெண்ணின் வயிற்றில் துணி, பஞ்சை வைத்து தைத்த டாக்டர்
பிரசவித்த பெண்ணின் வயிற்றில் துணி, பஞ்சை வைத்து தைத்த டாக்டர்
ADDED : பிப் 20, 2025 06:44 AM
பெலகாவி: பிரசிவித்த பெண்ணின் வயிற்றில் துணியும், பஞ்சையும் வைத்து டாக்டர் தைத்த சம்பவம், பெலகாவி அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது, தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பெலகாவி மாவட்டம், சிக்கோடியின் முகலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ருதி ராஜு. கர்ப்பிணியான இவர், இம்மாதம் 7ம் தேதி சிக்கோடி மகளிர், குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சுகப்பிரசவம் மூலம் குழந்தை பிறந்தது.
மருத்துவமனையில் சில நாட்கள் இருந்து, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்த இரண்டு நாட்களில் ஸ்ருதிக்கு வயிற்றில் வலி ஏற்பட்டது. உடனடியாக ஹூக்கேரி தாலுகா மருத்துவமனைக்கு சென்றனர்.
அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது, வயிற்றில் துணி, பஞ்சு வைத்து தைத்திருப்பது தெரியவந்தது. உடனடியாக, அவை அகற்றப்பட்டன.
இதனால் கோபமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், மருத்துவமனை அதிகாரிகளிடம் அதிருப்தி தெரிவித்தனர்.
சிக்கோடி மாவட்ட மருத்துவ அதிகாரி சுகுமார் பாகி கூறியதாவது:
பிப்., 7ல் அப்பெண்ணுக்கு சுகப்பிரசவம் நடந்தது உண்மை தான். இது தொடர்பாக ஹூக்கேரி சுகாதார அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பிரசவம் பார்த்த டாக்டர்களிடம் கேட்டுள்ளேன்.
இவ்விஷயத்தில் டாக்டரின் அலட்சியம் தெரியவந்தால், மூத்த அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிப்பேன். இனி இதுபோன்ற சம்பவம் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

